உக்ரைனுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகரான கிவ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர். ரஷியாவுக்கு எதிரான போரில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் நடுநிலையான நிலைபாட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மோடியிடம் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
"இந்தியாவுக்கு பெரிய செல்வாக்கு இருக்கு"
இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர், "போரை முடிவுக்குக் கொண்டு வர, நடுநிலையுடன் செயல்படாமல் இந்தியா எங்கள் பக்கம் இருக்க வேண்டும். நான் விரைவில் இந்தியாவுக்குச் சென்று இந்திய மக்களை சந்திக்க விரும்புகிறேன்.
ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. இந்தியா உலகில் ஒரு முக்கியமான நாடு. அமைதியை ஏற்படுத்துவதில் அந்நாட்டால் பெரும் பங்கு வகிக்க முடியும்" என்றார். பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "இத ஒரு நல்ல சந்திப்பு.
உண்மையில் ஒரு வரலாற்று சந்திப்பு. இது என்னையும் பிரதமர் மோடியையும் பற்றியது அல்ல. மாறாக தேசம் மற்றும் அதன் மக்களைப் பற்றியது. உக்ரைன் வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடி, ஜெலன்ஸ்கி பேசியது என்ன?
நாங்கள் இந்தியாவுடன் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டோம். இது ஒரு ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். இந்த சந்திப்பின் போது, எங்களது தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்று பிரதமரிடம் தெரிவித்தேன்.
இந்த விவகாரத்தில் இந்தியா தனது பங்கை ஆற்றும். இது வெறும் மோதல் மட்டுமல்ல. இது ஒரு மனிதனின் உண்மையான போர் என்பதையும், உக்ரைன் என்று அழைக்கப்படும் முழு நாட்டிற்கும் எதிரான அவரது பெயர் புதின் என்பதையும் இந்தியா அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
நீங்கள் ஒரு பெரிய நாடு. உங்களுக்கு பெரிய செல்வாக்கு உள்ளது. நீங்கள் புதினை தடுத்து நிறுத்தி அவரது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம். அவருக்கான இடத்தில் அவரை வைக்கலாம்" என்றார்.