போலாந்தில் இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை முடித்து கொண்டு, உக்ரனைக்கு பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். உக்ரைன் தலைநகரான கிவ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அவர் சென்றிருக்கிறார்.


உக்ரைனுக்கு வரலாற்று பயணம்: கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, உக்ரைன் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இன்று காலை 7:30 மணியளவில் (கிவ்வின் உள்ளூர் நேரம்) உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, 7:55 மணியளவில் ஹோட்டலுக்கு சென்றார்.


புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கங்களுடன் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்த காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தி சிலை அருகே பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சவால்களை சமாளிக்க ஒன்றுபட வேண்டிய நேரம் இது" என கூறினார்.


உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் ரஷியா மீது மேற்குலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இம்மாதிரியான சூழலில், ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வரும் காரணத்தால் இந்தியாவை மேற்குலக நாடுகள் விமர்சித்து வருகின்றன.


 






முடிவுக்கு வருகிறதா போர்? ஆறு வாரங்களுக்கு முன்புதான், ரஷியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ரஷிய பயணத்தின்போது கூட, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தே ஆலோசனை நடத்தியிருந்தார்.


இது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த ரஷியாவின் செயலை இந்தியா கண்டிக்கவில்லை என மேற்குலக நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.