இந்தியாவுக்கான உக்ரேனியத் தூதர் இகோர் பொலிகா, உக்ரேன் தலைநகர் மற்றும் அதன் பிற இடங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்த நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று இந்தியாவின் தலையீட்டைக் கோரியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பொலிகா, மகாபாரதத்தை மேற்கோள் காட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அந்த நாட்டின் சுமூக உறவைத் தொடரவும், நெருக்கடியான இந்த நேரத்தில் உக்ரைனுக்கு உதவவும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார் அவர்.

இகோர் பொலிகா கூறியதாவது: தலைநகரின் புறநகர் பகுதியில் சில தாக்குதல்கள் நடந்தன. உக்ரைன் எல்லைக்குள் சில தாக்குதல்கள் நடந்தன. எங்கள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய முதல் தகவலை அறிக்கையை நாங்கள் தற்போது பெற்றுள்ளோம்.

இந்த கட்டத்தில் இந்தியாவின் தலையீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவர்: “ஐரோப்பிய நாகரிகம் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவுடில்யர், சாணக்கியர் போன்ற அறிவு ஜீவிகளால் இந்தியா ராஜதந்திரத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு மற்றும் பல ஆண்டுகளாக அணிசேரா இயக்கத்தின் (NAM) தலைவராக இந்த நாடு இருந்து வருகிறது,  இது பனிப்போரின் போது உருவாக்கப்பட்ட அமைப்பு. மேலும், தற்போது, ​​இந்தியாவிடமிருந்து அரசியல் உதவிக்காக நாங்கள் கெஞ்சுகிறோம். ரஷ்யாவுடன் நல்ல உறவு வைத்துள்ள உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் மோடியும் ஒருவர்” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

ரஷ்யாவின் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே  போர் மூண்டுள்ள சூழலில், இந்தப் பிரச்னையில், இந்தியா நடுநிலை வகிக்கும் என வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே சிங் பதிலளித்துள்ளார். உக்ரைனிடமும் ரஷ்யாவிடம் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக, கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது.

இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது.  அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது.