'என்ன மாதிரியான நேரத்தில் வந்திருக்கிறேன், மாஸ்கோ வந்ததில் குதூகலம் அடைகிறேன்' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 


உக்ரைனை விட ராணுவ பலத்தில் ரஷ்யா யானை பலத்துடன் இருக்கிறது. தன்னுடைய ராணுவ பலத்தில் குறைந்த வலிமையுடன் இருக்கும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமானத் தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், உக்ரைன் மக்கள் மீதும், குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. அதிக அளவில் தற்காப்பு, அதிக பாதுகாப்பு கொண்ட ஆயுதங்களால் மட்டுமே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. 


மேலும், உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல என்றும், ராணுவ நடவடிக்கை எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. அதேபோல உக்ரைனில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். 


இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரை ரஷ்ய அதிகாரிகள் வரவேற்று, அழைத்துச் சென்றனர். 


அப்போது பேசிய இம்ரான் கான், ''உங்களின் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்ன மாதிரியான நேரத்தில் வந்திருக்கிறேன்? மாஸ்கோ வந்ததில் குதூகலம் அடைகிறேன்!'' என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். அதற்கு ரஷ்ய அதிகாரிகள் ''இம்ரான் கான், உங்களை நாளை சந்திக்கிறோம்!'' என்று கூறிக்கொண்டே அவரை காரில் அழைத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 


 






இந்த வீடியோவை பாகிஸ்தானின் ஜியோ செய்தியைச் சேர்ந்த முர்தாஸா அலி ஷா வெளியிட்டுள்ளார்.


அமெரிக்கா எதிர்வினை


உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு பொறுப்புமிக்க நாடும், பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ரஷ்யப் போரில் எங்களின் நிலை குறித்து பாகிஸ்தானிடம் விளக்கிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.