ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இரு நாடுகளும் சளைக்காமல் ஒன்றை ஒன்று தாக்கி வருகின்றன. அந்த வரிசையில், நேற்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், மறுபுறம், கருங்கடலில், நீரில் செல்லும் ட்ரோன்களை வைத்து, ரஷ்ய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்துள்ளது உக்ரைன்.

Continues below advertisement


ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை பேட்டுத் தாக்கிய உக்ரைன்



மேற்கு ஆசிய நாடான துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில், ரஷ்யாவை சேர்ந்த ' கைரோஸ்' என்ற சரக்கு கப்பல் அந்நாட்டின் நோவோரோசிய்க் என்ற இடத்தை நோக்கி, காலி டேங்கர்களுடன் சென்று கொண்டிருந்தது.


அப்போது, கருங்கடலில் போஸ்பரஸ் ஜலசந்தி நுழையும் இடத்துக்கு அருகே அந்த கப்பல் சென்றபோது, திடீரென ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், கப்பலில் சிக்கியிருந்த 25 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர்.


இச்சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பற்றி எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.


இந்த திடீர் தாக்குதலை நடத்தியது யார் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், அந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது.  அந்த கப்பல்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறி அந்த கப்பல்கள் சென்றதால், நீரில் செல்லக் கூடிய ட்ரோன் மூலம் அவைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பே இதேபோன்று ரஷ்ய போர்க் கப்பல்கள் மீது கப்பல்களை மோதவிட்டு, உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் - 3 பேர் பலி


முன்னதாக, நேற்று இரவு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா டிரோன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்காக, 28 அம்ச அமைதித் திட்டத்தை அவர் முன்மொழிந்த நிலையில், அதில் சில நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. எனினும், திருட்டத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்கா வழங்கிய நிலையில், அது ஓரளவிற்கு ஏற்கும்படியாக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். ஆனாலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒருவர் மீது ஒருவர் நடத்தும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.