தமிழக பகுதிக்கு அருகே வருவதற்கு முன், இலங்கையை பதம் பார்த்த டிட்வா புயலால், அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘
இந்திய பகுதிக்கு நகர்வதற்கு முன், இலங்கையில் தாண்டவமாடிவிட்டு தான் வந்திருக்கிறது டிட்வா புயல். அந்நாட்டில் டிட்வா புயல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. நிலச்சரிவால் பலர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இந்நிலையில், மீட்புப் படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
153-ஆக அதிகரித்த உயிரிழப்பு
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 191 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு
டிட்வா புயல் இலங்கையை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உதவிக்கரம் நீட்டிய இந்தியா
இப்படிப்பட்ட சூழலில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அங்கு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 80 தேசிய பேரிடர் மிட்புப் படை வீரர்கள் மற்றும் 21 டன் நிவாரணப் பொருட்களுடன், இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் நேற்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனிடையே, இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்புவில் உள்ள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. இந்திய பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கிவருகிறது.
மேலும், அவசர உதவி தேவைப்படும் இந்திய பயணிகள், +94773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.