Continues below advertisement

சமீபத்தில், வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும், க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்யவும் அவர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், 3-ம் உலக நாட்டினர் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் பதிவு கூறுவது என்ன.?

இது குறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ட்ரம்ப் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “தொழில்நுட்ப ரீதியாக நாம் முன்னேறியிருந்தாலும், குடியேற்றக் கொள்கை பலரின்  ஆதாயங்களையும், வாழ்க்கை நிலைமைகளையும் அரித்துவிட்டது. அமெரிக்காவின் அமைப்பை முழுமையாக மீட்பதற்கு வழிவகுக்கும் விதமாக, மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் இடம்பெயர்வை நிரந்தரமாக இடைநிறுத்துவேன், பைடன் அரசால் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் குடியேற்றத்தை ரத்து செய்வேன், அதில் தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் கையெழுத்திட்டவர்களும் அடங்குவர்“ என்று  ட்ரம்ப் கூறியுள்ளார்.

Continues below advertisement

மேலும், “அமெரிக்காவிற்கு நிகர சொத்தாக இல்லாத எவரையும், அல்லது நம் நாட்டை நேசிக்க இயலாத எவரையும் அகற்றுவேன், நம் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கூட்டாட்சி சலுகைகள் மற்றும் மானியங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவேன், உள்நாட்டு அமைதியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புலம்பெயர்ந்தோரை, குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றுவேன், மேலும், பொதுமக்களுக்கு இடையூராகவும், பாதுகாப்புக்கு ஆபத்தான அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் பொருந்தாத எந்தவொரு வெளிநாட்டினரையும் நாடு கடத்துவேன்.“ என்றும் ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.

அதோடு, “அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத ஆட்டோபென் ஒப்புதல் செயல்முறை மூலம் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட, சட்டவிரோத மற்றும் சீர்குலைக்கும் மக்கள்தொகையில் பெரும் குறைப்பை அடைவதே இந்த இலக்குகளின் நோக்கமாக இருக்கும். REVERSE MIGRATION(குடிபெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக சொந்த இடத்திற்கே திருப்பி அனுப்புவது) முறையால் மட்டுமே இந்த சூழ்நிலையை முழுமையாக சரிசெய்ய முடியும்.  மற்றபடி, அமெரிக்க வெறுப்பு, திருடு, கொலை என்று அமெரிக்காவை அழிக்க நினைப்பவர்களைத் தவிர, அனைவருக்கும் மகிழ்ச்சியான ‘THANKSGIVING‘(அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஒரு விழா) நீங்கள்(அவர் குறிப்பிட்டவர்கள்) இங்கு ரொம் காலம் இருக்க மாட்டீர்கள்“ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

3-ம் உலக நாடுகளிலிருந்து குடியேற தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தாலும், அந்த 3-ம் நாடுகள் எவை என்பது குறித்து எதுவும் கூறவில்லை. ஒருவேளை, அதற்கென ஒரு பட்டியலை தயாரித்து அவர் அதை வெளியிடலாம் என எதிர்பார்க்கலாம்.