உள்ளாடைகளில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யும் புதிய முயற்சியை இங்கிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. 


புற்றுநோய்:


புற்றுநோய் என்பது இன்று மிகவும் பரவலாக காணப்படும் ஒரு நோயாக காணப்படுகிறது. உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இந்நோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், உரிய நேரத்தில் இந்த நோயை கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதே உண்மை. ஆனால், புற்றுநோய் தொடர்பான முழுமையான விழிப்புணர்வு இல்லாததே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களில் ஒன்றான மாரிசன், அரசுடன் சேர்ந்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.


மாரிசன் நிறுவனம் அறிவிப்பு:


புதிய முயற்சி தொடர்பாக மாரிசன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மார்பக மற்றும் விரைப்பை புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளைப் பற்றி உள்ளாடைகளில் ஆலோசனை லேபிள்களை வைக்க,  அரசின் தேசிய சுகாதார சேவையுடன் இணைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக  புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட பின்னடைவு, மருத்துவர்கள் அடுத்தடுத்து முன்னெடுத்த வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால், சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை இங்கிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது.






விழிப்புணர்வு வாசகங்கள்:


அதன்படி, மாரிசன் சூப்பர் மார்க்கெட் கடைகளில் விற்கப்படும் ஆண்களுக்கான ஷார்ட்ஷ்களில் முதற்கட்டமாக, விரைப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, பெண்களுக்கான உள்ளாடைகளில் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தொடர்பான வாசகங்கள் பொருந்திய லேபிள்கள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த லேபிளில் ஒரு க்யூஆர் கோட் இடம்பெற்று இருக்கும், அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் கூடுதல் ஆலோசனைக்கு தேசிய சுகாதார சேவை மையத்தை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றங்களை அறிய உதவும்:


இதுதொடர்பாக பேசியுள்ள இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்தின் இயக்குனர் காலி பால்மர், ”தேசிய சுகாதார சேவை மையம் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஆடைகளில் சுகாதார செய்திகளை வெளியிடுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உடலில் ஏற்படும் மாற்றங்கள், புற்றுநோய்க்கான அறிகுறிகள் எவை என்பன தொடர்பான யோசனையை பொதுமக்களிடையே ஏற்படுத்த முடியும்” என கூறியுள்ளார்.