பிரிட்டன் அரசியலில் தொடர் கொந்தளிப்புக்கு மத்தியில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், எதிர்க்கட்சிகளிடம் இருந்து அழுத்தத்தை சந்தித்துள்ளார்.


சக கட்சிகாரரிடம் மோசமாக நடந்து கொண்ட விவகாரத்தில், அவரின் நெருங்கிய நண்பரும் பதவி விலகியுள்ள அமைச்சருமான வில்லியம்சனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.


இதுவரை இலாகா இல்லாமல் அமைச்சராக இருந்த சர் கவின் வில்லியம்சன், சக கன்சர்வேடிவ் கட்சி சகாக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தனது பதவியை ராஜினாமா செய்தார்.


 






வில்லியம்சனின் ராஜினாமாவை மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும், அவரது தனிப்பட்ட ஆதரவு மற்றும் விசுவாசத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கன்சர்வேடிவ் அரசாங்கங்கள் மற்றும் கட்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது" என்றார்.


கவின் வில்லியம்சனை அமைச்சராக தேர்வு செய்திருப்பதன் மூலம் சுனக்கின் மோசமான தேர்வு அம்பலப்பட்டிருப்பதாகவும் இது அவரின் தலைமைத்துவத்தின் தோல்வியை பிரதிபலிப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற கீழ்சபையில் நடைபெறும் பிரதமரின் மாதாந்திர கேள்வி நேரத்தில் தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் இந்த பிரச்னையை எழுப்பி அழுத்தம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே, வில்லியம்சன் நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வில்லியம்சனுக்கு எதிராக புகார் வந்தது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருந்த ஜேக் பெர்ரி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமரான ரிஷி சுனக்கிடம் அக்டோபர் 24ஆம் தேதி கூறினார். அதாவது, வில்லியம்சன் அமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு புகார் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் அரசியலில் தொடர் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம், சக அமைச்சர்களே போர்கொடி தூக்கிய நிலையில், பிரதமராக பொறுப்பு வகித்த போரிஸ் ஜான்சன், தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, வரி குறைப்பு மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்து வந்த லிஸ் டிரஸ், பதவி ஏற்ற 45 நாள்களிலேயே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.


இந்த சூழலில்தான், பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றுள்ளார். தற்போது, அவருக்கும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.