அருணா மில்லர் என்ற இந்திய வம்சாவளி இன்று அமெரிக்க அரசியலில் வரலாறு படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள மேரிலாந்து மாகாணத்தின் துணை நிலை ஆளுநருக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.


மேரிலாந்தின் துணை நிலை ஆளுநராக புலம்பெயர்ந்தவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.58 வயது மில்லர், மேரிலாந்து மாகாண அவையில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஆளுநர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வெஸ் மூர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


ஆளுநரை தொடர்ந்து மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியாக துணை நிலை ஆளுநர் பதவி விளங்குகிறது. ஆளுநர் மாநிலத்திற்கு வெளியே இருக்கும்போதும் அல்லது தனது பொறுப்பை தொடர இயலாத பட்சத்திலும் துணை நிலை ஆளுநர் அந்த பதவியை வகிப்பார். ஆளுநர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ துணை ஆளுநர் ஆளுநராவார்.






அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை எதிர்த்து ஆளுநராகவும் துணை நிலை ஆளுநராகவும் மூர், மில்லர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ஆதரவாக, அதிபர் பைடன், துணை அதிபர் ஹாரிஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.


முன்னதாக, இந்திய தேசியவாதிகளுக்கு ஆதரவாக மில்லர் செயல்படுவதாக எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், அதனை அவர் மறுத்துள்ளார். கட்சி கடந்து, இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப், குடியரசு கட்சி ஆதரவாளர்கள் மில்லருக்கு ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர். 


வெற்றி பெற்ற அவர் பேசுகையில், "மேரிலாந்து, ஜனநாயகம் வாக்குச்சீட்டில் இருக்கும்போது சிறிய ஆனால் வலிமைமிக்க அரசு என்ன செய்ய முடியும் என்பதை இன்று இரவு நாட்டுக்குக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் பிரிவினையை விட ஒற்றுமையையும், உரிமைகளை கட்டுப்படுத்துவதை விட உரிமைகளை விரிவுபடுத்துவதையும், பயத்தை காட்டிலும் நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். 


உங்களின் அடுத்த கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னராக வெஸ் மூரையும் என்னையும் தேர்ந்தெடுத்தீர்கள். 1972 இல் நான் இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து, அமெரிக்காவின் வாக்குறுதிக்காக நான் ஒருபோதும் உற்சாகமடைவதை நிறுத்தவில்லை. அந்த வாக்குறுதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டேன்" என்றார்.


மில்லர், ஆந்திராவில் பிறந்தவர். பின்னர், தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.