பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 11,000 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு அதை திருப்பி கொடுக்காமல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். 


51 வயதான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பெரும் மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.


இன்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த வழக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெர்மி ஸ்டூவர்ட் - ஸ்மித் மற்றும் நீதிபதி ராபர்ட் ஜே ஆகியோர், தப்பியோடிய தொழிலதிபரை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்கும் தீர்ப்பை வழங்கி உள்ளனர்.






நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "நீரவ் மோடியை நாடு கடத்துவது அநியாயமாகவோ அடக்குமுறையாகவோ இருக்கும் என்பதை ஏற்று கொள்ள முடியாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், லண்டனில் இருந்து மும்பை ஆர்தர் சிறைக்கு நீரவ் மோடியை கொண்டு வருவதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.


ஆன்டிகுவா மற்றும் பர்புடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ள அவரது மாமா, மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பல்வேறு இந்திய ஏஜென்சிகளால் தேடப்பட்டு வருகிறார்.


உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து 14 நாட்களுக்குள் பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தை நீரவ் மோடி அணுகலாம். ஆனால், அவரது வழக்கு பொது நலன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். நீரவ் மோடி, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தையும் அணுகலாம்.


இன்றைய பின்னடைவுக்குப் பிறகு, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அவரது வழக்கறிஞர் குழு இன்னும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், தப்பியோடிய தொழிலதிபர் மார்ச் 2019 இல் கைது செய்யப்பட்டது முதல் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரவ் மோடியை மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகிய இரண்டும் தேடி வருகின்றன.