2023 ஆம் ஆண்டில், உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மந்தநிலைக்கு செல்லும் என்று ஐ.எம்.எஃப் தெரிவித்த நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிசி சுனக்கின் அறிவிப்பை, மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.


மந்த நிலைக்கு செல்லும் நாடுகள்


2023 ஆம் ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும் என்றும், உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மந்தநிலைக்கு செல்லும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்திருந்தார். மேலும், இது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் வலுவான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரமும் மந்த நிலைக்கு செல்லும் என தெரிவித்தார். இதனால் ஒட்டுமொத்த சர்வதேச சந்தை முதலீட்டாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த ஓராண்டாக விலைவாசி உயர்வால், ஏழைகளின் வாழ்க்கை மோசமாகி வருகிறது. மேலும் வரும் காலங்களில், பொருளாதார மந்த நிலை மோசமடையும் என்ற அச்சம், உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


நிதியுதவி அறிவிப்பு:


இந்த சூழ்நிலையில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிலையை மேம்படுத்துவதற்காக, சுமார் 900 பவுண்டுகள், அதாவது கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 90,000 ரூபாயை  நிதி உதவியாக வழங்க முடிவு செய்துள்ளார்.






இந்த 900 பவுண்டுகள் வரும் நிதியாண்டில் வழங்கப்படும் என்றும், மூன்று கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த நிதியுதவியானது, தகுதியானவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.


வாழ்வாதாரம் மேம்படும்:


இந்த நிதியுதவியானது குறைந்த வருமானம் கொண்ட பிரிட்டிஷ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் செலவுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்று பிரிட்டனின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை இன்று ( செவ்வாய்க்கிழமை ) தெரிவித்துள்ளது.


இந்த 900 பவுண்டுடன் கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 150 பவுண்டுகள் வழங்கப்படும் என்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 300 பவுண்டுகள் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.




பாராட்டு தெரிவிக்கும் மக்கள்:


கடந்த ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 1200 பவுண்டுகள் மதிப்புள்ள நிதி உதவியை வழங்கிய நிலையில், இந்த ஆண்டு நாட்டின் நிதி உதவி நாட்டின் நிதி போக்கு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் 900 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிஷி சுனக் அரசாங்கம் அறிவித்துள்ளது.


பொருளாதார மந்தி நிலை அச்சத்திலும் இந்த திட்டத்தை தவிர்க்காமல், ஏழை மக்கள் நலன் கருதி தொடர்வதால் பிரிட்டன் நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.