பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் இன்று பதவியேற்றார். நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய முதல் உரையில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிராக ஸ்திர நிலையைக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக் நிகழ்த்திய உரை:
பிரிட்டன் கடுமையானப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. தற்போது பிரிட்டனுக்கு ஒற்றுமையும், ஸ்திரத்தன்மையும் தேவை. எங்களது கட்சியையும் நாட்டையும் மேம்படுத்துவதற்கே நான் அதிக முன்னுரிமை அளிப்பேன்.
நான் உங்களுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன். பிரிட்டன் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நாள் தோறும் உழைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
நாட்டுக்குத் திரும்பக் கொடுப்பது எனது வாழ்க்கையின் பெரிய பாக்கியம். எனது நாடாளுமன்ற சகாக்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று ரிஷி சுனக் பேசினார்.
லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்று 44 நாட்கள் மட்டுமே பொறுப்பு வகித்தார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அவர் பதவி விலகினார்.
இதையடுத்து, ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராகவும், பிரிட்டனின் புதிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறை. கடந்த 200 ஆண்டுகளில் இளமையான பிரதமர் இவரே ஆவார்.
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கினார் ரிஷி சுனக். பிரிட்டன் பிரதமர் போட்டியில் இருந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் விலகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்.
2019ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்ற நிலையில், அவரது கட்சிக்குள்ளேயே சுமார் 50 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்படி போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கியவர்களில் ரிஷி சுனக்கும் ஒருவர். போரிஸ் ஜான்ஸனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளைதான் திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கினார் ரிஷி சுனக். ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற அவர்கள் பின்னர் இங்கிலாந்திற்கு 1960களில் குடிபெயர்ந்தனர்.
இங்கிலாந்து சென்ற ரிஷி சுனக்கின் பாட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்ட்டனில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். ஓராண்டு அங்கு வேலை செய்து பணம் சேர்த்தபின்பு, தனது கணவர் மற்றும் குழந்தைகளை அங்கு அழைத்துக்கொண்டார். அந்த குழந்தைகளில் ரிஷி சுனக்கின் தாய் உஷா சுனக்கும் ஒருவர். அவர் இங்கிலாந்து சென்றபோது அவருக்கு 15 வயது ஆகியிருந்தது, குறிப்பிடத்தக்கது