சிட்ரங் புயல் காரணமாக மோசமான வானிலை ஏற்பட்டு வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கால்நடைகள் நேற்று பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டன. இந்த சூழலில் சிட்ரங் புயல் சிட்டகாங் பரிசல் கடற்கரையில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு கரையைக் கடந்தது. 


எதிர்பார்ப்புக்கு மாறாக சிட்ரங் புயலானது 9 மணி நேரத்திற்கு முன்பே, வங்கதேசத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவலின்படி, சித்ராங் சூறாவளி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, டாக்காவில் இருந்து வடகிழக்கே 90 கிமீ தொலைவில் வங்காளதேசத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு மையம் கொண்டுள்ளது.


இது அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 






அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 வடக்கு வங்கக் கடலிலும், மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசக் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






திரிபுரா, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் தெற்கு அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


வங்காளதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மிசோரம், திரிபுரா அரசு அனைத்து கல்வி நிறுவனங்களையும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.