பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் தனது தலைமையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் வந்த சவாலை அவர் முறியடித்துள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 211 எம்பிக்கள் வாக்களித்த நிலையில், அவருக்கு எதிராக 148 பேர் வாக்களித்தனர். அவரது கட்சியை சேர்ந்த 59 சதவிகித நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. இது, கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக பொறுப்பு வகித்த தெரசா மேவுக்கு கிடைத்த வாக்குகளை காட்டிலும் குறைவு. அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆறே மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் சொல்ல வேண்டுமானால், சமீக காலத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி இந்த அளவுக்கு குறைவான வாக்குகள் பெறுவது இதுவே முதல்முறை.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜான்சன் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். பின்னர், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு அமைந்துள்ள டவுனிங் தெருவில் அவர் பார்ட்டி நடத்தியது தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, சொந்த கட்சியை சேர்ந்த எம்பிக்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் போரிஸ் ஜான்சன், "நாம் ஒரு கட்சியாக ஒன்றிணைந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் உதவுவதற்கும், கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சினைகளை அகற்றுவதற்கும், நமது தெருக்களை பாதுகாப்பானதாக்குவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து, பணியாற்றி, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்" என பதிவிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றிருப்பது குறித்து பேசியுள்ள பிரிட்டன் கல்வித்துறை அமைச்சர் நாதிம் ஜஹாவி, "பிரதமர் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார். இதிலிருந்து நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒற்றுமையாக இருந்தால் நம்மால் சாதிக்க முடியும். எனவே, இனி அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தலாம்" என்றார்.