உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தன் நாட்டின் கிழக்குப் பகுதியான டோன்பாஸ் நகரத்தில் முன்னணியில் இருந்து போரிட்டு வரும் வீரர்களைச் சந்தித்துள்ளார். 


ரஷ்யப் படைகளை உக்ரைன் நாட்டுக்குள் நுழைய விடாமல் லிசிசேன்ஸ்க் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தலைமையிடங்களையும், போர்ப் பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி. 


மேலும் அவர் டோன்பாஸ் பகுதியில் இருக்கும் பாக்முத் என்ற இடத்தைப் பார்வையிட்டதோடு, அங்கு போரில் ஈடுபட்டு வரும் வீரர்களிடம் உரையாடியுள்ளார். `உங்கள் சிறந்த பணிக்காகவும், நம் அரசையும், நம் அனைவரையும் பாதுகாக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.. நான் சந்தித்த, கைகொடுத்த, பேசிய, ஆதரவு தெரிவித்த அனைவரையும் குறித்து பெருமிதம் கொள்கிறேன்’ என்று உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தன் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளார். 



ரஷ்யாவின் குண்டுவீச்சின் போது கடற்கரை ஓரத்தில் இருந்த மாரியுபோல் நகரத்தில் இருந்து வெளியேறிய மக்களைச் சந்திப்பதற்காக தென்கிழக்கு உக்ரைனில் இருக்கும் சாபோரிஷ்ஷியாவுக்கும் பயணித்ததாகக் கூறிய உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, `ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கிறது.. பெரும்பாலும் ஆண்கள் இல்லாத குடும்பங்களே இருக்கின்றன. போருக்குச் சென்ற கணவர்கள்.. கைதுசெய்யப்பட்ட கணவர்கள்.. சிலரது வீட்டின் ஆண்கள் போரில் இறந்துள்ளனர்.. வீடு இல்லாமல், அன்பு செலுத்த நெருங்கிய உறவுகள் இல்லாமல் துயரம் சூழ்ந்து இருக்கிறது.. ஆனால் நமது குழந்தைகளுக்காக நாம் வாழ வேண்டும். நம்மிடையே இருக்கும் உண்மையான ஹீரோக்கள் அவர்கள் தான்!’ என்றும் கூறியுள்ளார். 






உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியின் போர்க்களத்தை மேற்பார்வையிட்ட பயணம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியப் படையின் முன்னாள் தளபதி மிக் ரயான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `செலென்ஸ்கி தன் மீதான எச்சரிக்கைகளையும் கடந்து போரில் பங்கேற்பவர்களை நேரில் பார்வையிட்டுப்பது முன்னணி படையினருக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. இது அவரையும் அவருக்கு எதிராக இருக்கும் விளாடிமிர் புடினையும் வேறுபடுத்தி காட்டுகிறது. எதிர்காலத்தில் மோசமாக நடத்தப்படும் ரஷ்யப் படையினரை புடின் பார்வையிட மாட்டார் என்று நான் உறுதியாக சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.