இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தினமும் தனது சொந்த சிறுநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு அவர் சொன்ன காரணம்தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


இங்கிலாந்து நாட்டின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசிப்பவர் ஹாரி மட்டாடின். 34 வயதான ஹாரி 2016 ஆம் ஆண்டு முதல் சிறுநீர் குடித்து வருகிறார். தனது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிறுநீர் குடிக்கும் போது அமைதி, சமாதானம் கிடைக்கிறது என்று கூறுகிறார். இதன் காரணமாக சொந்த சிறுநீரை குடிக்க பழகி விட்டதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்து இருக்கிறார். "சிறுநீர் குடித்தல் எவ்வளவு சக்தியை கொடுக்கும் என நினைத்து இருக்கிறேன். சிறுநீர் குடித்த உடனேயே எனது மூளை திடுக்கென வேகமாக செயல்பட துவங்குகிறது. மேலும் எனது மன அழுத்தத்தை போக்கியது. எனக்கு புதுவிதமாக அமைதி, சமாதானம் மற்றும் உறுதியான உணர்வு ஏற்படுகிறது. இது இலவசமாகவே கிடைக்கும் அருமருந்தாக இருப்பதனால், இதை கொண்டு எப்போது வேண்டுமானாலும் என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று தோன்றியது," என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.



ஹாரி மட்டாடின் தினமும் 200 மில்லி லிட்டர் சிறுநீர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். 34 வயதான இவர், தினமும் ஒரு மாதம் பழைய சிறுநீர் அதன் மேல் சில துளி புது சிறுநீர் ஆகியவற்றை கலந்து குடித்து வருகிறார். இவர் தனது சிறுநீர் மிகவும் சுத்தமானது என்றும், அதன் மேல் புது சிறுநீர் கலக்கும் போது வாடை அடிக்காது என தெரிவித்து இருக்கிறார். இதுதவிர இதன் சுவை அவ்வளவு மோசமாக இருக்காது என்றும் தெரிவிக்கிறார். பொதுவாக நாள்பட்ட பழைய சிறுநீர் அதிக வாடையை வெளியேற்றும். ஆனால் அதன் சுவை புதிதாக இருக்கும் என ஹாரி தெரிவித்தார். சிறுநீர் குடிப்பதால் தனக்கு ஏற்படும் பலன்கள் மற்றும் மகிழ்ச்சியை கருதி, சிறுநீர் வாடை மற்றும் சுவை தனக்கு பிடிக்கத் துவங்கியது என்று அவர் தெரிவித்தார். சிறுநீரை குடிப்பதோடு, அதை கையில் எடுத்து முகம் முழுக்க தடவி மசாஜ் செய்து மாய்ஸ்ச்சுரைசர் போன்றும் பயன்படுத்தி வருகிறார். 



"சிறுநீர் என்னை இளமையாக காட்டுகிறது. நாள்பட்ட பழைய சிறுநீர் எனது முகத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனை முகத்தில் தடவியதும் உடனடி மாற்றங்கள் தெரிகிறது. எனது சருமம் இளமையாக, மிருதுவாக மிளிர்கிறது. நாள்பட்ட சிறுநீர் உடல் நலனுக்கு சிறந்த உணவு ஆகும். இதனை சருமத்தில் தடவும் போது, அதனை இளமையாக வைத்துக் கொள்கிறது. சிறுநீர் தவிர என சருமத்திற்கு வேறு எந்த அழகு சாதன பொருட்களையும் நான் பயன்படுத்துவதில்லை." என அவர் மேலும் தெரிவித்தார். "சிறுநீர் குடிப்பது மிகவும் மோசமான செயல். இவ்வாறு செய்யும் போது ஒருவரின் உடலில் இருக்கும் நீர்ச்சத்து மிக வேகமாக குறைந்து விடும். மேலும் இது உடலில் அதிகப்படியான கிருமிகளை உருவாக்கும்," என பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஜெப் பாஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.