கொரோனா பெருந்தொற்று, உக்ரைன், ரஷ்யா போர் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல நாடுகளும் பலவாறு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீப காலமாகவே பணவீக்க பிரச்சனையால் தவித்து வந்த பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த கணக்கின்படி பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டக்ஸின்படி பணவீக்கம் 10.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆகஸ்டில் 9.9 சதவீதமாக இருந்தது. இதுதான் கடந்த 40 ஆண்டுகளில் பிரிட்டன் எதிர்கொண்ட மிகப் பெரிய பணவீக்கம் என்று தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம் என்றார்.
மன்னிப்பு கேட்ட பிரதமர்:
பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்தன.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ், “நான் எனது கடமைகளை முழு பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள நினைக்கிறேன். அதேநேரத்தில் என்னுடைய தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். நமது பொருளாதாரத்தை சரிசெய்வதில் நான் ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதிலும், தலைவராக தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு..
செல்வந்தர்களின் வரிகளை குறைக்கும் பிரிட்டனின் யோசனை பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடனும் இதனைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அவர், ”அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. பணவீக்கம் உலகம் முழுவதும் உள்ளது. ஆனாலும் அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அமெரிக்காவைவிட பிற இடங்களில் பணவீக்கம் மோசமாக உள்ளது. மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் சரியான கொள்கை இல்லை. டாலரின் மதிப்பு உயர்வதை நினைத்து நான் கவனம் கொள்ளவில்லை. ஆனால் பிற நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருவது கவலை தருகிறது. பொருளாதாரத்தை சரி செய்ய பெரும் செல்வந்தர்களின் வரிகளை குறைக்கும் பிரிட்டனின் யோசனையுடன் நான் ஒன்றுப்படவில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.