பிரபல விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் எப்போதும் தன்னுடைய பாணியில் விளம்பர படங்களை எடுத்து வெளியிடும். அந்தவகையில் தற்போது  ஒரு பெண் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் மேல் எமிரேட்ஸ் ஊழியரைப்போல் வேடம் இட்டு நிற்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  


இதுதொடர்பாக எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விளம்பரத்தில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  அதில்,”எங்களுடைய பழைய விளம்பரம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஆகவே அதேபோன்று நாங்கள் மீண்டும் ஒரு விளம்பரத்தை இம்முறை திட்டமிட்டோம். இந்த முறை அந்த பெண்ணுடன் சேர்த்து விமானத்தையும் புர்ஜ் கலிஃபாவின் உயர்த்திற்கு பறக்க வைத்தோம். இதை அவ்வளவு சுலபமாக செய்து முடிக்கவில்லை. இதற்காக நாங்கள் 11 முறை புர்ஜ் கலிஃபாவை சுற்று பறக்க நேரிட்டது. மேலும் எங்களுடைய எம்380 விமானம் 145 நாட் ஸ்பீடில் பறந்தது. அதன்பின்பு துபாயை சுற்றியும் பறந்தது ” எனத் தெரிவித்துள்ளது. இந்த முறையும் புர்ஜ் கலிஃபாவின் மேல்  ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கும் பெண்ணான நிகோல் ஸ்மித் லூட்விக் நிற்கவைக்கப்பட்டுள்ளார். 






முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோன்று ஒரு விளம்பர வீடியோவை எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.  அந்த விளம்பர வீடியோவை பலரும் கண்டு ரசித்தனர். அத்துடன் அந்த வீடியோ க்ரீன் மேட் போட்டு எடுக்கப்பட்டதாக இருக்கும். எப்படி புர்ஜ் கலிஃபாவின் மீது ஒரு பெண்ணை நிற்க வைத்து எடுக்க முடியும் அதுவும் ஒரு விளம்பர படத்திற்கு இப்படி செய்வார்களா என்று பலரும் கூறிவந்தனர். மேலும் புர்ஜ் கலிஃபாவில் பெண் நிற்பது போலி எனவும் தெரிவித்து வந்தனர். 


அப்போது அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த விளம்பரம் படம் எடுப்பதற்கு முன்பாக செய்யப்பட்ட ஏற்பாடுகளை விவரிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டது. அதன்படி, 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாவின் மேல் ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கும் பெண் ஒருவரை நிற்க வைக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக அவர் நிற்பதற்கு என்று 1.2 மீட்டர் அகலம் கொண்ட ஒரு சிறிய இடத்தை ஏற்படுத்தியுள்ளனர். 






இதை கொண்டு புர்ஜ் கலிஃபாவின் 160ஆவது மாடிக்கு மேல் இருந்து உயரமான இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்ல அவர்களுக்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் எடுத்துள்ளது. அதன்பின்னர் விளம்பரம் படம் எடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அப்பெண்ணை அங்கு நிற்க வைத்துள்ளனர். அந்த வீடியோவில் எமிரேட்ஸ் நிறுவனம் உங்களை பல சுவாரஸ்யமான இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளது என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது. 


புர்ஜ் கலிஃபாவில் நிற்கும் பெண் அங்கு சென்றவுடன், "உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் நான் நிற்கிறேன்" என மகிழ்ச்சியாக கூறுவதும் இந்த வீடியோவில் காட்சிகளாக வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நிற்பதற்கு அப்பெண் சில நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புர்ஜ் கலிஃபாவின் உயரமான பகுதியில் நடிகர் டாம் குரூஸ், ஐக்கிய அமீரக மன்னர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஏறி நின்றுள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக இந்தப் பெண் அங்கு இரண்டாவது முறையாக ஏறி நின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய கடத்தப்பட்ட சிறுமி: ஸ்நாப்சாட் உதவியுடன் மீட்ட பிரெஞ்சு போலீஸ்!