மர்ம நபர்கள் இரண்டு பேரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியை அவரது போனின் ஸ்நாப்சாட் ஜிபிஎஸ் உதவியுடன் மீட்டுள்ளது பிரெஞ்சு நாட்டு காவல்துறை.
14 வயது சிறுமி ஒருவர் தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு அடைக்கலம் தருவதாகக் கூறி அவரைத் தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குற்றவாளி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கடத்தப்பட்டதை அடுத்து அவரை வற்புறுத்தி கஞ்சா புகைக்க வைத்ததாகவும் குடியிருப்பு சொந்தக்காரரும் மற்றொருவரும் அந்தப் பெண்ணை மாறி மாறி வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகள் இருவரும் முறையே 26 மற்றும் 64 வயதுடையவர்கள்.
தான் கடத்தப்பட்டதை அடுத்து அந்த சிறுமி தனது இன்ஸ்டாகிராம் மூலமாக தனது பெற்றோருக்கு ரகசிய செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து பெற்றோர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறை அந்தப் பெண்ணை தனது ஸ்நாப்சாட்டில் இருக்கும் லோகேஷன் என்கிற வசதியை இயக்கச் சொல்லியிருக்கிறது. அதன்பிறகு அந்த ஸ்நாப்சாட் கணக்கு எந்தப் பகுதியில் இருந்து இயங்குகிறது என்பதை தொடர்ந்து அந்த சிறுமி இருந்த அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குடியிருப்பின் ஒவ்வொரு கதவாகத் தட்டி எந்தக் கதவை தட்டும்போது அந்தச் சிறுமி ‘ஆம் இந்த வீடுதான்’ என செய்தி அனுப்புகிறாரோ அந்த வீட்டுக்குள் சென்று கையும் களவுமாக குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர்.
இதில் தனது போனில் இருந்த ஆதாரத்தை அவசரமாக அழிக்க முயன்ற ஒரு குற்றவாளியையும் உடனடியாகப் பிடித்துள்ளனர். கடத்தியது மற்றும் வன்கொடுமை செய்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலுறவு சம்மதத்துடந்தான் நடந்ததாக இருவரும் கூறினர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி போதைப் பொருள் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அவசர சிகிச்சைக்குப் பிறகு அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சினிமா பாணியில் நிகழ்ந்த இந்த மீட்பு சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்முறை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு பிரான்ஸ் அரசு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது