உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி, தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. 


எலான் மஸ்கின் அடுத்த அதிரடி:


ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் எலான் மஸ்க்.


அடுத்த மாதத்தில் இருந்து ட்விட்டரில் செய்திகள் படிப்பதற்காக கட்டணம் வசூலித்து கொள்ள ஊடக வெளியிட்டாளர்களுக்கு ட்விட்டர் அனுமதி வழங்கியுள்ளது. எவ்வளவு கட்டுரைகள் படிக்கிறார்களோ, அதன் அடிப்படையில் கட்டணம்  வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாத சந்தாவை பெறவில்லை என்றால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அடுத்த மாதம் முதல், கட்டுரைகளின் அடிப்படையில் பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஊடக வெளியிட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.


செய்திகளை படிப்பதற்கு கட்டணம்:


மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் எப்போதாவது ஒரு கட்டுரையைப் படிக்க விரும்பும் போது ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த இது வழிவகை செய்கிறது. ஊடக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் வெற்றியாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். பல  செய்தி நிறுவனங்கள், ஏற்கனவே சந்தா அடிப்படையில் தங்கள் இணையதளங்களில் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.


ட்விட்டர் நிறுவனத்தின் நிதிநிலைமையை அதிகரிக்கவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்திருந்தார். நிதிநிலைமையை சரி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.


ப்ளூடிக் நீக்கம்:


அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், துறைசார்ந்த முக்கிய நபர்கள் தங்களுடைய கணக்குகளை அதிகாரபூர்வமானது என அறிவிக்கும் வகையில் பெயருக்குப் பக்கத்தில் இந்த ப்ளு டிக் இருந்து வருகிறது.இந்த ப்ளூ டிக்கை அவர்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 


அதே சமயம் பணம் செலுத்தாத பயனாளர்களுக்கு அவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, கட்டணம் செலுத்த ஏப்ரல் 20ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


இச்சூழலில், ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரோகித் சர்மா, விராட் கோலி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் கடந்த 21 ஆம் தேதி நீக்கப்பட்டன.


இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கட்டணம் செலுத்ததாத, அதேசமயம் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்ககள் போன்ற குறிப்பிட்ட ட்விட்டர் பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.