ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அட்ராசிட்டி பண்ணிய எலான் மஸ்க்
நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் இந்த சமூகத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தகவல்களை உள்ளங்கையில் பெற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய வலைத்தளங்கள் பிற மக்களுடன் உரையாடும் தகவல் தொடர்பு சாதனமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் ட்விட்டரின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது.
நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) அந்நிறுவனம் கைமாறியதில் இருந்தே தினம் தினம் தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வண்ணம் சிஇஓ ஆக இருந்த எலன் மஸ்க் செயல்பட்டு வந்தார்.
அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக் பெற கட்டணம், 3 வகையான அதிகாரப்பூர்வ கணக்கை குறிக்கும் குறியீடுகள், ஊழியர்கள் பணிநீக்கம் என தொடர் நடவடிக்கையில் இறங்கிய எலான் மஸ்க் கடந்த மாதம் ட்விட்டரின் நீல குருவி லோகோவை சில தினங்களுக்கு மாற்றினார். அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பின் மீண்டும் நீல குருவி வந்தது.
தொடர்ந்து கட்டணம் செலுத்தாத பயனாளர்களின் ப்ளூ டிக் குறியீடு பறிக்கப்பட்டது. பின்னர் 10 லட்சம் ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.
சொன்னபடி நியமிக்கப்பட்ட புதிய சிஇஓ
இப்படியான நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் எலான் மஸ்க் ட்விட்டரில் "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?" என கேள்வியெழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதில் பெரும்பான்மையானவர்கள் அவர் விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் எலான் உறுதியளித்திருந்தார்.
மேலும், இந்த வேலைக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்த பிறகு விலகுவேன் எனவும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “ட்விட்டருக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஆறு வாரங்களில் அவர் தன் பணியைத் தொடங்குவார்” எனவும் தெரிவித்திருந்தார்.
புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க நபராக வலம் வரும் லிண்டா யாக்காரினோ, பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் Turner Broadcasting System என்ற ஊடக நிறுவனத்தில் தனது வேலையை தொடங்கிய அவர், மார்க்கெடிங் துறையில் பதவி வகித்தார்.
இதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு NBCUniversal ஊடக நிறுவனத்தில் சேர்ந்த லிண்டா யாக்காரினோ, 2007 ஆம் ஆண்டு பொழுதுபோக்கு விளம்பர விற்பனையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு NBCUniversal இல் உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளின் சேர்மனாக பதவியேற்ற லிண்டா யாக்காரினோ, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் விளையாட்டு, உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து கவுன்சிலில் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார்.