MPOX Disease : எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 


2022 ஆம் ஆண்டில் புதிய வைரஸ்கள் தோன்றி பல்வேறு இடங்களில் நோய்தொற்று பரவ காரணமாக இருந்தது.  கொரோனாவை தவிற, mpox நோய் (குரங்கு அம்மை), லாசா காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், மார்பர்க் வைரஸ் நோய், ஜிகா வைரஸ் நோய், தக்காளி காய்ச்சல், ஒட்டகக் காய்ச்சல் மற்றும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் ஆகியவை உலகைப் பற்றிக் கொண்ட சில நோய்களாகும்.  


இந்நிலையில், உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 


குரங்கு அம்மை 


கடந்த வருடன் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவியது. குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும். இது மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், சின்னம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் கொண்டுள்ளது.


குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, சில சமயங்களில் தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்த அனைத்து அறிகுறிகளும் சரும சிவப்பாகுதல் போன்ற பிற பிரச்சனைகளுக்கு, நான்கு நாட்களுக்கு முன்பே தோன்றும். கண் மற்றும் வாய் பகுதியிலிருந்து தொடங்கி, உடல் முழுவதும் இந்த நோய் பரவுகிறது.


இந்த நோயால் சுமார் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 140 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களில் இதன் பாதிப்பு 90 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முடிவுக்கு வந்த அவசர நிலை


இந்நிலையில், கடந்த ஓராண்டாக பரவி வந்த எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரதிநித்துவப்படுதாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, ”எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் அவசர நிலை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் இதன் பாதிப்பு இருக்காது என்று நினைக்க வேண்டாம். இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் இனியும் மக்கள் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்பதற்காக மட்டுமே. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. தடுப்பூசிகள், பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.