எலான் மஸ்க்-கின் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெரிபைடு கணக்குகளை கண்டறிய தற்போது புளூ டிக்கை தொடர்ந்து, “Official" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய அரசாங்க நிறுவன தளங்களின் ட்விட்டர் பக்கங்களில் “Official" என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. 


இதன்மூலம், எந்த கணக்கு உண்மையானது மற்றும் எது போலியானது என்பதைப் பயனர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய ட்விட்டர் புளூ சேவையின் தலைவரான எஸ்தர் க்ராஃபோர்ட், அரசாங்கங்கள், நிறுவனங்கள் அல்லது பொது நபர்கள் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகள, மற்ற பயனர்களிடமிருந்து பிரிக்க சாம்பல் நிற "Official" வார்த்தை குறியைப் பெறும் என்று கூறினார்.


இதுகுறித்து எஸ்தர் க்ராஃபோர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “புளூ டிக் மற்றும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட கணக்குகள் கொண்ட @TwitterBlue சந்தாதாரர்களை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று நிறைய பேர் கேட்டனர். அதனால்தான் நாங்கள் ட்விட்டரை கையில் எடுக்கும்போது  கணக்குகளைத் தேர்ந்தெடுக்க "Official" லேபிளை அறிமுகப்படுத்துகிறோம்” என பதிவிட்டு இருந்தார். 


முன்னதாக "பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்" என்று ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.