வளைகுடா நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக திகழ்வது ஈரான். அந்த நாட்டின் முன்னாள் ஜெனரலான கொல்லப்பட்ட காசிம் சுலைமானியை நினைவுகூறும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சுலைமானியின் சொந்த ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கெர்மனில் சாஹேப் – அல் – மான் மசூதி அருகே நடைபெற்றது.
73 பேர் உயிரிழப்பு:
இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். ஏராளமானோர் குழுமியிருந்த இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடித்ததில் மக்கள் அலறியடித்து காயங்களுடன் அங்குமிங்கும் ஓடிய சில நிமிடங்களில் மற்றொரு குண்டு வெடித்தது.
அடுத்தடுத்து இரட்டை வெடிகுண்டு வெடித்ததால் அங்கு ரத்த ஆறு ஓடியது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 73 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 170 பேர் வரை காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் இந்த வெடிகுண்டு ரிமோட் மூலமாக இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்:
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் சடலங்கள் சாலையில் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த கெர்மன் துணை ஆளுநர் இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் மிகுந்த பீதியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே உலகில் பல நாடுகளில் போர், பதற்றம், சண்டை நீடித்து வரும் சூழலில் இந்த தாக்குதல் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈராக்கில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்தான் ஜெனரல் சுலைமானி. இவருக்காக நடந்த 4வது ஆண்டு நினைவுக்கூட்டத்தின்போது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சுலைமானிக்கு ஈரானிலும் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்றதாக தகவல் வெளியாகவில்லை. ஈரான் நாட்டிற்கு எதிராக பல குழுக்கள் செயல்பட்டு வருவதால் இந்த சம்பவத்தை யார் செய்துள்ளார்கள்? என்று இதுவரை தெரியவில்லை.