Japan Plane Accident: ஜப்பான் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டு, கொழுந்துவிட்டு எரிந்த காட்சிகள் இணயத்தில் வைரலாகி வருகின்றன. 


விமானங்கள் மோதிக்கொண்டு விபத்து:


ஜப்பானின் ஹோக்கிடா மாகாணம், சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து 367 பயணிகள் உட்பட 379 பேர் புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹானெடா விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.47 மணிக்கு தரையிறங்க முயன்றது. அதேநேரத்தில், அந்த விமான நிலையத்திலிருந்து நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்காகப் புறப்பட்ட கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டிஹெச்சி-8-315 டாஷ் 8 ரக சிறிய வகை விமானத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதியது.






கொழுந்துவிட்டு எரிந்த விமானங்கள்:


ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத்தொடங்கின. இதனால், விமானங்களின் ஓடுபாதையில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. விமானங்கள் எரிந்தவாறு ஓடுபாதையில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். இதனால், பயணிகள் விமானத்துக்குள் இருந்த அனைவரும் அவசர கதவுகள் வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால்,கடலோரக் காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், விபத்தில் சிக்கிய இரண்டு விமானங்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக, ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் தெர்வித்துள்ளது. 










வரலாற்றில் முதல்முறை:


ஏர்பஸ் நிறுவனம் ஏ350 மாடலை அறிமுகப்படுத்திய  பிறகு, அந்த மாடல் விமானம் ஒன்று  விபத்தில் முற்றிலும் நாசமானது இதுவே முதல்முறையாகும். 1985 இல் டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குப் பறந்த JAL ஜம்போ ஜெட் மத்திய குன்மா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 520 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு ஜப்பானில் உயிர்சேதத்தை ஏற்படுத்திய முதல் விமான விபத்து இதுவாகும். இதையடுத்து ஹனேடா விமான நிலையத்தில் உள்ளூர் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஹனேடாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


தொடரும் சோகம்:


புத்தாண்டு நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஜப்பானில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலிருந்தே இன்னும் ஜப்பான் மக்கள் மீளாத நிலையில், இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.