காஷ்மீர் விவகாரம்:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற்றதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பிரச்னையாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம். காஷ்மீர் தனக்குதான் சொந்தம் என பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா அதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பல முறை எழுப்பியுள்ளது. ஆனால், இது உள்நாட்டு விவகாரம் என்றும் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வரும் முக்கிய நாடாக இருப்பது துருக்கியே (துருக்கி).
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்னை:
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கியே அதிபர் எர்டோகன் மீண்டும் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78ஆவது அமர்வில் உலக தலைவர்கள் மத்தியில் பேசிய எர்டோகன், "தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு வழி வகுக்கும் மற்றொரு முக்கியமான முன்னேற்றம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை. இதற்கான ஒத்துழைப்பை துருக்கி வழங்க தயாராக உள்ளது. ஒத்துழைப்பு மூலம் காஷ்மீரில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிறுவுவதே வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்றார்.
இந்தியா இருப்பது பெருமை:
தொடர்ந்து பேசிய அவர், "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பங்கு வகிப்பது பெருமைக்குரியது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 தற்காலிக உறுப்பினர்களை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க விரும்புகிறேன். இந்த 20 நாடுகள் (5 நிரந்தர உறுப்பினர்கள் + 15 தற்காலிக உறுப்பினர்கள்) சுழற்சி முறையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு தெரியும், உலகம் ஐந்தை விட பெரியது. உலகம் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யாவை பற்றியது மட்டுமல்ல" என்றார்.
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பொது சபையில் துருக்கியே அதிபர் எழுப்புவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு, உயர்மட்ட ஐ.நா பொதுச் சபை அமர்வில் உலகத் தலைவர்களிடம் தனது உரையின் போது காஷ்மீர் பிரச்னையை துருக்கியே அதிபர் எழுப்பினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவும் பாகிஸ்தானும் 75 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் நிறுவிய பிறகும், இன்னும் ஒருவருக்கொருவர் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரில் ஒரு நியாயமான, நிரந்தரமான, அமைதியான சூழல் நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்றார். கடந்த 2020ஆம் ஆண்டும், ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எர்டோகன் பேசியிருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க