Amit Shah: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்ப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 


மகளிர் இடஒதுக்கீடு மசோதா:


மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான இந்த மசோதா, கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்ற படவில்லை.


இதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.  ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் போனதால் அவரது கனவு நனவாகாமலே போனது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது.


மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு நேற்று அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடரின்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து, இதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.


”ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள்"


விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். இன்று உலகளவில் பெண் விமானிகள் 5 சதவீதமாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் 15 சதவீதமாகவும் உள்ளனர்.  பெண்கள், ஆண்களுக்கு சமம் என மசோதா மீதான விவாதத்தில் பேசிய பல பெண் எம்.பிக்கள் கூறினர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என்று நான் கூறுவேன். பெண்களுக்கான பாதுகாப்பு, மரியாதை மற்றும் பங்கேற்பு, இந்த நாட்டின் பிரதமரான பிறகு மோடியால் வழங்கப்பட்டுள்ளது.


பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவில்லை. இந்த மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கிறது. ஜி 20 உச்சி மாநாட்டில் பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தின் அவசியத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். சில கட்சிகளுக்கு பெண்கள் அதிகாரம் என்பது அரசியல் பிரச்னையாகவும், வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாகவும் இருக்கலாம். ஆனால், பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு இது கொள்கை, நம்பிக்கையின் பிரச்னை. நேற்றைய தினம் வரலாற்றில் எழுதப்படும். நேற்று விநாயக சதுர்த்தி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தோம்" என்றார்.