அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தர் தொலைக்காட்சி வாயிலாக மதபோதனையில் ஈடுபட்டார்.  ஏ9 எனும் தொலைக்காட்சி வாயிலாக அவர் மதபோதனையில் ஈடுபட்டபோது, அவருடன் ஏராளமான அழகிகள் சின்னஞ்சிறு ஆடைகள் அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதனிடையே, மதபோதனையின் போது தீவிரவாத கருத்துகளை பரப்பியது, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அட்னான் அக்தர் மீது புகார்கள் குவியத் தொடங்கின. தன்னுடன் உறவு கொண்டவர்களை பூனைக்குட்டிகள் என அவர் பொதுவெளியில் விமர்சித்ததும் பேசுபொருளானது.


 


இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அட்னான் அக்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு ஆயிரம் காதலிகள் இருப்பதாக தெரிவித்தார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, 69 ஆயிரம் ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நிறைவு பெற்றபோது, பாலியல் குற்றச்சாட்டு, ராணுவ உளவு மற்றும் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதன் காரணமாக, அட்னான் அக்தருக்கு நீதிமன்றம் ஆயிரத்து 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.






 


இதனிடையே, கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்தான்புல் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அட்னான் அக்தருக்கான சிறை தண்டனையை 1,075 ஆண்டுகளில் இருந்து 8, 658 ஆண்டுளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் 10 பேருக்கும் இதே தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.