துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து நொருங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்தநிலையில், துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போதுவரை 8,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 6,000க்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 






மீட்பு பணிகள்:


துருக்கியில் மட்டும் உலகம் முழுவதிலிருந்து சுமார் 24,000க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், பேரிழப்பு ஏற்படுத்திய கொடூர தாக்குதலை சரிசெய்ய போராடி வருகின்றனர். இதுவரை, 8 ஆயிரத்திற்கு அதிகமான மக்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.


துருக்கியின் அவசரகால மேலாண்மை நிறுவனம், துருக்கியில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 5,400 ஐ தாண்டியதாக தெரிவித்துள்ளது, மேலும், இந்த பேரழிவில் சுமார் 31, 000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 380,000 அதிகமான மக்கள் அரசாங்க தங்குமிடங்கள் அல்லது ஹோட்டல்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து துருக்கி குடியரசு தலைவர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறுகையில், “துருக்கிய குடியரசின் வரலாற்றில் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் சந்தித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். 


உலக சுகாதார அமைப்பின் மூத்த அவசரகால அதிகாரி அடெல்ஹெய்ட் மார்சாங், “நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட முழுப் பகுதியிலும் 23 மில்லியன் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறியுள்ளார். 


தெற்கு துருக்கியில் ஏற்பட்ட பகுதிக்குள் கிட்டத்தட்ட 12,000 தன்னார்வலர்களுடன் 80 விமானங்கள் மீட்பு பணிக்காக நிறுத்தியுள்ளதாகவும், தேவைப்படும் வரை விமான சேவைகள் தொடரும் என்று துருக்கி ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிலால் எக்சி கூறினார்.






இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:


கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 17 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகினர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,   2011ஆம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600-க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.  கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் பலியாகலாம் என அமெரிக்கா கணித்துள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம்.