துருக்கி நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றாக இருப்பது இஸ்தான்புல். இங்கு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.


இதில், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் 38 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் தீப்பிழம்புகள் வெளியேறுவதை காணலாம். பலத்த சத்தம் கேட்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பி ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


இந்த பயங்கர வெடிப்பு, எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. புகழ்பெற்ற இஸ்திக்லால் ஷாப்பிங் தெருவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி அளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


 






அந்த தெருவில் கடைகள் மற்றும் உணவகங்கள் வரிசையாக காட்சியளிக்கின்றன. இது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருப்பதால், பொதுவாக அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.


இதுகுறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிர்சேதம். மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.


அருகில் அமைந்துள்ள காசிம்பாசா நிலைய அதிகாரிகள், அனைத்துக் குழுவினரும் சம்பவ இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், மேலும் விவரங்களைத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


 






சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வது உள்ளூர் ஊடகம் வெளியிட்ட புகைப்படங்களில் பதிவாகியுள்ளது. 2015 முதல் 2016 வரையில் இஸ்தான்புல்லை இலக்கு வைத்து ஐஎஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ பெரிதும் பாதிக்கப்பட்டது.


இந்த குண்டுவெடிப்பு குறித்து செய்தி வெளியிட துருக்கியின் வானொலி மற்றும் தொலைக்காட்சி கவுன்சில் கட்டுபாடு விதித்துள்ளது.


இதை, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், கொடூரமான தாக்குதல் என கண்டித்துள்ளார். இது பயங்கரவாத தாக்குதலாக இருப்பதற்கு அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.