அமெரிகாவின் டெக்சாஸ் நகரில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில்,  விங்ஸ் ஓவர் டல்லாஸ் எனும் பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் பங்கேற்றன. வானில் சுழன்றடித்தும், தலைகீழாக பறந்தும், புகையை கக்கியவாறும் வானில்  விமானங்கள் சீறிப்பாய்ந்தன. அந்த வகையில், இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்தபோது தான், 6 பேரை பலி வாங்கிய இந்த கோர விபத்து நிகழ்ந்தது.  


வானில் மோதி நொறுங்கிய விமானங்கள்:


இரண்டாம் உலகப்போரில் குண்டுகள் வீச பயன்படுத்தப்பட்ட அளவில் பெரிய போயிங் பி-17 விமானமும், ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்-கோப்ரா என்ற விமானமும் வானில் பறக்க விடப்பட்டன. போயிங் விமானம் தரையில் இருந்து பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மறுமுனையில் இருந்து பறந்து வந்த கிங்-கோப்ரா விமானம் திடீரென இடதுபக்கமாக திரும்பியது.


இதனால், போயிங் விமானத்தின் மேல்பகுதியில் மோதிய கிங் கோப்ரா விமானம், வானிலேயே சுக்கு நூறாக வெடித்து சிதறியது. போயிங் விமானமும் இரண்டு துண்டுகளாக உடைந்து தரையில் விழுந்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏராளமானோர் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்த நிலையில், விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.






விபத்தில் 6 பேர் பலி என தகவல்:


விபத்து தொடர்பான முழு காரணங்கள் இன்னும் தெரியவில்லை என டெக்சாஸ் நகர மேயர் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு விமானங்களில் இருந்த 6 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணைக்கு பிறகே, விபத்துக்கான காரணம் தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாம் உலகப்போர் விமானங்கள்:


குண்டு வீச பயன்படுத்தப்படும் நான்கு இன்ஜின் கொண்ட இந்த போயிங் பி-17 விமானம், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான வான்வழிப் போரில் அமெரிக்காவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. குண்டு வீசும் விமானங்களில் இதுவரை அதிகளவில் தயாரிக்கப்பட்ட விமானம் என்ற பெருமையையும் போயிங் பி-17 விமானம் பெற்றுள்ளது.


 P-63 கிங்-கோப்ரா என்பதும் பெல் விமான நிறுவனத்தால் இரண்டாம் உலகப்போரின் போது, தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட போர் விமானமாகும். ஆனால், இந்த வகை விமானங்கள் அமெரிக்காவை காட்டிலும் சோவியத் விமானப்படையால் மட்டுமே போரில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் அதிகளவில் அருங்காட்சியங்கள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகளில் மட்டுமே P-63 கிங்-கோப்ரா ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.


முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி கனெக்டிகட் பகுதியில் உள்ள, வின்ட்சர் லாக்ஸில் உள்ள விமான நிலையத்தில் போயிங் B-17 விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.