துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 17 வயது சிறுமியை உயிருடன் மீட்புப் படையினர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நிலநடுக்கம்:


தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 


இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்தியா உட்பட பல நாடுகளும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர்.   


17 வயது சிறுமி மீட்பு:


இந்நிலையில் நேற்று , துருக்கியில் 17 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்து மீட்புப்படையினர் தெரிவிக்கையில், சிறுமியை மீட்கும் போது கண்களைத் திறந்து மூடிக்கொண்டார். தற்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். மீட்பு பணியில் ஒரு வாரமாக வேலை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு உயிரை காணும் போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஒரு பூனையாக கூட இருந்தாலும் கூட என தெரிவித்தார்.






7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் முழு நகரங்களையும் தரைமட்டமாக்கிய நிலையில், சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 248 மணி நேரத்திற்குப் பிறகு அலெனா ஓல்மெஸ் என்ற 17 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.


மீட்புப் படையினரை சிறுமியின் உறவினர் கட்டிப்பிடித்து, உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


அதையடுத்து, ஊடகங்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை சம்பவ இடத்தை விட்டு வெளியேறுமாறு மீட்பு படையினர் கூறினர். அதையடுத்து மீண்டும் அவர்களது மீட்பு பணியை தொடர ஆரம்பித்து விட்டனர்.


நிலநடுக்கம் ஏற்பட்டு 248 மணி நேரத்திற்குப் பிறகு, கட்டட இடிபாடுகளில் சிக்கிய 17 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.