மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.


முதல் இரண்டு நாள்களில் மட்டும் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், நிலைமை மிக மோசமாக மாறியது. அது எந்தளவுக்கு என்றால், 8 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.


சிரியாவில் மட்டும் 53 லட்சம் பேர் வீடற்றவர்களாக மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.


இதன் விளைவாகவே, தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. நிலநடுக்கம் காலை நேரம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.


இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். 


மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். ஆறு நாள்களுக்கு பிறகும் சிலர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகிறது. 


அதேநேரம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சிரியாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 


கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது. 


தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


இந்தியாவுடன் துருக்கி நல்லுறவை பேணவில்லை என்றாலும் அந்நாட்டுக்கு சரியான நேரத்தில் உதவிகளை செய்துள்ளது இந்தியா. துருக்கியின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் இந்திய விமானப்படையின் நான்காவது சி17 விமானம் அதானாவுக்கு சென்றது.


இதற்கிடையே, நிதி உதவி வழங்கியதற்காக துருக்கி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்திருந்தது. இந்தியாவை நண்பர் என குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல், ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என நெகிழ்ச்சி பொங்க கூறி இருந்தார்.