கனடாவிலும் மர்ம பொருள்:
கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ”கனடா வான்வெளியில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா மற்றும் அமெரிக்க விமானங்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.
அப்போது, அமெரிக்காவின் F-22 விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் உடன் தொலைபேசி மூலமாக பேசினேன். சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொள்ளும். வட அமெரிக்கா பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்க படைகளுக்கு நன்றி” எனவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் பாகங்கள் யுகோன் பகுதியில் வீழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலும் மர்மப் பொருள்:
முன்னதாக, நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்மப் பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த அந்நாட்டு அரசு, ”அந்த மர்மப் பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்மப் பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். அதிபர் ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம்” என தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருளின் பாகங்கள், வடக்கு அலாஸ்காவில் கனடா நாட்டு எல்லையை ஒட்டி உறண்ட நீர் நிலை மீது விழுந்துள்ளது.
உளவு பலூன்:
கடந்த வாரம் வடக்கு அமெரிக்கா மேலே சீனாவின் ராட்சத பலூன் பறந்து கொண்டு இருந்தது. அது வெறும் வானிலை ஆராய்ச்சிக்கான பலூன் என சீனா விளக்கமளித்தாலும், அமெரிக்கா அதனை ஏற்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டு வீழ்த்தியது. F-22 ரேப்டர் ரக ஜெட் கொண்டு AIM-9X ஏவுகணை மூலம் அந்த பலூன் அழிக்கப்பட்டது. இதே ஜெட் விமானத்தையும், ஏவுகணையையும் கொண்டு தான் அலாஸ்காவில் பறந்த மர்மப் பொருளும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தொடரும் குழப்பம்:
வடக்கு அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் மூன்று முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த இந்த பொருட்கள் விமான ஓட்டி இல்லாமல் அந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.