இந்தியா - இலங்கை நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில், இலங்கையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். 


இலங்கைக்கு இந்தியா உதவி:


மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மின்வலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்தியாவின் பொருளாதார நிதி உதவியால் கட்டப்பட்ட இந்த கலாச்சார மையத்தில் 600 பேர் அமரக்கூடிய வகையில் நவீன திரையரங்கு வசதிகள் நிறைந்த அரங்கமானது 11 தளங்களுடன் அமைந்துள்ளது.






பிரதமர் நரேந்திர மோடியின், “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையின்படி, இலங்கையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், நீர்வழி இணைப்பு வசதிகளை அதிகரிக்கவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 


மீனவர்கள் பிரச்னை:


இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு சென்றார். இலங்கையில் உள்ள இவ்விரு பகுதிகளும் படகு போக்குவரத்தில் இந்தியாவை இணைக்கும் முக்கிய இடங்களாகத் திகழ்வதால், படகு போக்குவரத்துக்கான பணிகளை தொடங்க இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.  இந்த நீர்வழி இணைப்பு இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் தொழில் பரிமாற்றங்களை முன்னெடுத்துச் செல்லவும் உதவும் என இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.


முன்னதாக அவர், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  , இந்த சந்திப்பின் போது, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்


அப்போது மீனவர் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையிலானது என்பதால், மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் முருகன் தெரிவித்தார்.


முன்னதாக, மன்னார் சென்ற அவர், இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவின் சின்னமாகத் திகழும் திருகேத்தீஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். ஆலய நிர்வாகத்தினர் இந்த ஆலயத்தின் புனரமைப்புக்கு இந்தியா உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் வசிக்கும் 400 குடும்பங்களுக்கு உணவு தானியங்களை இணையமைச்சர்  எல். முருகன் வழங்கினார். 




இந்திய நிதி உதவியின் கீழ் அமைந்துள்ள இந்த கலாச்சார மையம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார். அப்போது திருக்குறள் புத்தகத்தை அதிபருக்கு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை நல்லுறவு பற்றி பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.