Turkey Accident: துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கம்போல அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த சுரங்கத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
அப்போது அந்த சுரங்கத்தில் ஒரு பகுதியில் எதிர்பாராத விதமாக, நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் சுரங்கத்தில் தொழிலாளர்கள் 110 பேர் பணியில் இருந்தனர். இந்த விபத்தின்போது வேலை செய்து கொண்டிருந்த பலரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கி இருந்த 50க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், அந்த விபத்தில் வெடி விபத்திலும், இடிபாடுகளிலும் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் மற்றவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, சம்பவ இடத்திற்கு சென்று இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்வேன் எனவும், சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்காது என நம்பிக்கையுடன் கூறினார். சிக்கி இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதே இலக்கு என தெரிவித்தார். மேலும் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
இதுபோன்று 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 201 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கு துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு ஒரு பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. எதிர்பாராத விதமாக பற்றிய தீயினால் சுரங்கம் வெடித்தது. இதில் சுரங்கத்தில் பணியில் இருந்த 201 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுசம்பவம் துருகி நாடு முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.