பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் இன்று பதவி விலகியுள்ளார். லிஸ் டிரஸை பிரதமர் பதவியில் இருந்து தூக்க வலதுசாரி பழைமைவாதிகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நிதித்துறை அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனில் சந்தை மற்றும் அரசியலில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்து கொள்ளும் விதமாக தான் அறிவித்த பொருளாதார திட்டங்களில் சிலவற்றை அவர் திரும்பபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


குவாசி குவார்டெங்கிடம் நிதித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டிம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குவாசி குவார்டெங் பேசுகையில், "வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் இருந்து இரவோடு இரவாக லண்டனுக்குத் திரும்பிய பிறகு டிரஸின் வேண்டுகோளின் பேரில் நான் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார்.


 






பிரிட்டனில் புதிய அரசு அமைந்து 37 நாள்களே ஆகியுள்ளது. நிதித்துறை அமைச்சரின் பதவி பறிப்பு குறித்து இன்று நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் லிஸ் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, ட்விட்டர் பக்கத்தில் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ள குவார்டெங், "நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக சொன்னீர்கள். அதை ஏற்று கொண்டேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த லிஸ், "நீண்டகால நண்பராகவும் சக ஊழியராகவும் உங்களை அரசில் இருந்து இழந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நமக்கு ஒரே பார்வை உள்ளது" என்றார்.


1970இலிருந்து நாட்டின் மிகக் குறுகிய காலத்திற்கு நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் குவார்டெங். அதேபோல, மிக குறுகிய காலத்தில், நான்காவதாக ஒருவர் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.


 






கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, போரின் ஜான்சனை தொடர்ந்து பிரதமர் பதவியில் அமர்ந்த லிஸ் டிரஸ், பொறுப்பேற்றதில் இருந்து முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வர தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த புயலைக் கடப்போம் என்றும் லிஸ் கூறி இருந்தார்.


மேலும், நான்கு கேள்விகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், அதற்கு சில வார்த்தைகளிலேயே பதில் அளித்துவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது.