டொனால்ட் ட்ரம்ப் தனக்கு போரடிக்கும் போதெல்லாம், இந்தியா - பாகிஸ்தான் மோதலைப் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு விஷயத்தைக் கூறி, ஏழரையை கூட்டியுள்ளார்.

“இந்தியாவின் 5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது“

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் அவ்வப்போது கூறி வருகிறார். தற்போது மீண்டும் அதையே கூறியுள்ளார். இந்த முறை கூடுதலாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

“நாங்கள் ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அப்போது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நினைக்கிறேன்“ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டுமே தீவிர அணுசக்தி நாடுகள். இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டன என்றும், அது ஒரு புது வடிவிலான போர் போன்றது என்பது உங்களுக்கு தெரியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். சமீபத்தில் ஈரானில் நாங்கள்(அமெரிக்கா) அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததை பார்த்திருப்பீர்கள் என்றும், அது முற்றிலும் அழிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை, முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது என்று கூறியுள்ள ட்ரம்ப், மிகவும் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது, அப்போது நாங்கள் வர்த்தகம் மூலம் அதை தடுத்து நிறுத்தினோம் என்று மீண்டும் அதே சர்ச்சைக் கருத்தை அவர் கூறியுள்ளார்.

“நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்களா என்று நாங்கள் கேட்டோம், மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளாக நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஏற்கனவே எழுந்த சர்ச்சை

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, சுற்றுலாப் பயணிகளை சுட்டு வீழ்த்தியது. அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஒரே நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயரிடப்பட்ட அந்த தாக்குதலின்போது, தீவிரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. அதையும் வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.

இந்நிலையில், இந்த மோதலின்போது, 5 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தியா அதை முதலில் திட்டவட்டமாக மறுத்தது.

இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்திய ராணுவத் தலைவர், இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். போர் என்றால் இழப்புகளும் இருக்கும் என்றும் விளக்கமளித்தார். ஆனால், 5 விமானங்கள் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்து பேசியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்று பார்க்கலாம்.