Astronomer CEO: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தனது சக ஊழியருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காதலியுடன் சிக்கிய தலைமை செயல் அதிகாரி:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டேட்டா இன்ஜினியரிங் நிறுவனம் தான் ஆஸ்ட்ரோனோமெர். இதன் தலைமை செயல் அதிகாரி தான், தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார். காரணம், கடந்த 16ம் தேதியன்று மாசசெசூட்ஸின் ஃபாக்ஸ்போரோவில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வழக்கமாக மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சோர்வாக செல்லும்போது அங்கு திரண்டுள்ள ஜோடிகளை கேமராவில் ஃபோகஸ் செய்து காட்டுவார்கள். அவர்களின் மகிழ்ச்சியின் மூலம், திரண்டு இருப்பவர்களை உற்சாகப்படுத்துவார்கள். இது ”கிஸ் கேம்” என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய கிஸ் கேமில் எடுக்கப்பட்ட வீடியோவில் தான், ஆஸ்ட்ரோனோமெர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரன், காதலியுடன் சிக்கியுள்ளார்.

வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் பொதுமக்களை நோக்கி கிஸ் கேமரா திரும்பியுள்ளது. அப்போது ஆண்டி பைரன் ஒரு பெண்ணின் பின்பக்கமாக நின்று அவரது தோளின் மீது இரண்டு கைகளையும் போட்டு அணைத்தபடி நின்று இருந்தார். கேமரா தங்கள் பக்கம் திரும்பியதை உணர்ந்தது உடனே மேடையில் இருந்து கீழே குதித்து ஆண்டி தனது முகத்தை மறைத்துள்ளார். அவருடன் இருந்த பெண்ணும் பயம் மற்றும் கூச்சம் கலந்த முகத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டுள்ளார். இதனை கண்ட கேமராமேன், ஒன்று அவர்கள் தகாத உறவில் இருக்க வேண்டும் அல்லது அதிக அளவில் கூச்சப்பட வேண்டும் என மைக்கிலேயே சத்தமாக பேசியுள்ளார். இதனை கேட்டதும் அங்கிருந்த அனைவருமே சத்தமாக சிரிக்க தொடங்கியது” வீடியோவில் பதிவாகியுள்ளது.

வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்:

இசை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. காரணம் பைரனுடன் இருந்தது அவரது மனைவி அல்ல. ஆஸ்ட்ரோனோமெர் நிறுவனத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும், HR  பிரிவின் தலைமை அதிகாரியான க்ரிஸ்டின் கேபேட் என்பதாலே ஆகும். பைரனுக்கு ஏற்கானவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வசித்து வரும் நிலையில் தான், அலுவகலத்தில் பணியாற்றும் பெண்ணுடன் சேர்ந்து இசை கச்சேரிக்கு சென்றதும் பொதுவெளியிலேயே அவரை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பைரனை நம்பிக் கொண்டிருந்த அவரது மனைவி தான் பாவம் என பலரும் இணையத்தில் வேதனை தெரிவிக்க, கார்ப்ரேட் நிறுவனங்களின் கலாச்சாரம் பற்றிய விவாதங்களையும் தூண்டியுள்ளது. பணியிடத்தில் தொழில்முறை கொள்கைகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். இதுதொடர்பாக பைரன் மற்றும் க்ரிஸ்டின் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் தற்போது வரை வெளியாகவில்லை.