அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின், இன்று அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், அலாஸ்காவிற்கு புறப்படும் முன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement


புதினுக்கு எச்சரிக்கை விடுத்து ட்ரம்ப்


அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில், ஆங்கரேஜ் நகரில், எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படைத் தளத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேசுகின்றனர்.


இதற்காக அலாஸ்கா புறப்பட்ட ட்ரம்ப், செய்தியாளர்களை சந்தித்தபோது, உக்ரைனுக்காக தான் பேச வரவில்லை என்றும், ரஷ்ய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.


மேலும், தொடர் தாக்குதல்களை நடத்துவதே தங்கள் பலம் என்று புதின் நம்புவதாகவும், புதின் உடனான பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று நினைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.


உயிர்களை காப்பாற்றுவதற்காக போரை முடிவுக்கு கொண்டுவர தான் உழைத்துக் கொண்டிருப்பதாகவும், ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், ரஷ்யா கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தார் ட்ரம்ப்.


“புதின் மற்றும் ஜெலன்ஸ்கி அமைதியை ஏற்படுத்துவார்கள் என நம்புகிறேன்“


முன்னதாக, புதின் உடனான சந்திப்பு குறித்து கூறிய டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே முதல் முறை சந்தித்தபோது, ஒரு அடித்தளத்தை அமைத்துள்ள நிலையில், தற்போது புதினுடன் அலாஸ்காவில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.


இந்த இரண்டாவது சந்திப்பின்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் சில ஐரோப்பிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி அமைதியை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார். அவர்கள் அதை செய்வார்கள் என்று நினைப்பதாகவும், அப்படி நடந்துவிட்டால், அது சிறப்பானதாக இருக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


அதே சமயம், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது சுலபமானதாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் அது மிகவும் கஷ்டமான ஒன்று எனவும் கூறினார். தற்போது நடைபெற்று வரும் பேரில் அர்த்தமே இல்லை என்றும், போர் தொடங்கிய சமயத்தில் தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது என்றும், அது பைடனின் போர் என்றும் ட்ரம்ப் விமர்சித்தார்.


இதைத் தொடர்ந்து, அலாஸ்கா புறப்படும் முன்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை என்றால், ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.