அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், தான் மத்தியஸ்தம் செய்த விஷயங்கள் குறித்து பேசிய ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட இருந்த அணு ஆயுத மோதலை தடுத்ததாக மீண்டும் கூறியுள்ளார்.
“6 அல்ல 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - அணு ஆயுத போராக மாறியிருக்கும்“
இன்று ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ள நிலையில், தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் செய்து வைத்த மத்தியஸ்தங்கள் குறித்து ட்ரம்ப் கூறியுள்ளார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய அவர், கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியதாகவும், 6 மாதங்களைவிட சற்று அதிகமான காலத்தில் பல போர்களை நிறுத்தியதில் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஒரு பேர் பெரிய அளவில் போய்க்கொண்டிருந்தது உங்களுக்கு தெரியும், அதாவது 37 ஆண்டுகளாக, அதில் ஒன்று காங்கோ - ரவாண்டா இடையேயான போர் 31 ஆண்டுகளாக நடந்து வந்தது. மொத்தம் 6 பேர்களை தீர்த்து வைத்துள்ளோம்“. தீர்த்து வைத்தது மட்டுமல்ல, அமைதியை ஏற்படுத்தியுள்ளோம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் இந்தியா - பாகிஸ்தானை பார்த்தீர்களேயென்றால், விமானங்கள் வானத்திலிருந்து வீழ்த்தப்பட்டன. ஆறோ ஏழோ விமானங்கள் விழ்த்தப்பட்டன. அவர்கள் மிகப்பெரிய போரை நடத்த தயாராக இருந்தனர். அது அணு ஆயுதப் போராகக் கூட இருக்கலாம். ஆனால் அதை தீர்த்து வைத்தோம்“ என்று கூறி, ட்ரம்ப் இந்தியாவை மீண்டும் வம்பிற்கு இழுத்துள்ளார்.
இந்தியாவின் கூற்றும், பாகிஸ்தானின் நிராகரிப்பும்
இதனிடையே, சமீபத்தில் பேசிய இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங், பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்தியா வீழ்த்தியதாக தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
புதின் உடனான சந்திப்பு குறித்து கூறிய ட்ரம்ப்
புதின் உடனான சந்திப்பு குறித்து கூறிய டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே முதல் முறை சந்தித்தபோது, ஒரு அடித்தளத்தை அமைத்துள்ள நிலையில், தற்போது புதினுடன் அலாஸ்காவில் நடைபெறும் இந்த இரண்டாவது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டாவது சந்திப்பின்போது, ட்ரம்ப், புதின் இல்லாமல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் சில ஐரோப்பிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி அமைதியை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்கள் அதை செய்வார்கள் என்று நினைப்பதாகவும், அப்படி நடந்துவிட்டால், அது சிறப்பானதாக இருக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது சுலபமானதாக இருந்தாலும், உண்மையில் அது மிகவும் கஷ்டமான ஒன்று எனவும் கூறியுள்ளார். இந்த பேரில் அர்த்தமே இல்லை என்றும், அந்த சமயத்தில் தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது என்றும், அது பைடனின் போர் என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.