Trump Modi: மோடி உடனான தொலைபேசி உரையாடலின்போது வர்த்தக உலகம் தொடர்பாக அதிகளவில் பேசியதாக, ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement


தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்:


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினார். இந்திய மக்களுக்கும் அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்கர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். விளக்கு ஏற்றும் விழாவிற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வரும் கருத்துகளையும், ட்ரம்ப் மீண்டும் அந்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.



வாழ்த்து சொன்ன ட்ரம்ப்


நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ தீபாவளி பண்டிகையின் போது, ​​எதிரிகள் தோற்கடிக்கப்பட்ட, தடைகள் நீக்கப்பட்ட, சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பழங்காலக் கதைகளை நினைவு கூறுகின்றனர். தீபச் சுடரின் பிரகாசம், ஞானத்தின் பாதையைத் தேடவும், விடாமுயற்சியுடன் செயல்படவும், நமது பல ஆசீர்வாதங்களுக்கு எப்போதும் நன்றி செலுத்தவும் நமக்கு நினைவூட்டுகிறது” என குறிப்பிட்டு இந்திய மக்களுக்கும் அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்கர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.


ரஷ்ய எண்ணெய் விவகாரம்


தொடர்ந்து பேசுகையில், “உங்கள் பிரதமரிடம் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். வர்த்தகம் பற்றிப் பேசினோம். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம், ஆனால் பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி. அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.


எங்களுக்கு இடையே நல்ல உறவு இருக்கிறது, அவர் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் போர் முடிவுக்கு வருவதை அவர் விரும்புகிறார். உங்களுக்குத் தெரியும், அவர்கள் அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை. எனவே, அவர்கள் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து அதை குறைத்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.


பாகிஸ்தான் விவகாரம்:


மேலும், “மோடி சிறந்த நபர், என்னுடைய சிறந்த நண்பர். அவருடன் பாகிஸ்தான் உடனான அமைதி குறித்தும் பேசினேன். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் இல்லாமல் இருப்பது மிகவும், மிகவும் நல்ல விஷயம்.  இந்தியாவும் அமெரிக்காவும் சில சிறந்த ஒப்பந்தங்களில் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பிராந்திய அமைதியை எடுத்துக்காட்டுகின்றன” என குறிப்பிட்டார்.


வம்பிழுக்கும் ட்ரம்ப்:


ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்காது என்று மோடி தனக்கு உறுதியளித்ததாகவும், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இந்த கூற்றுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து வருகிறது. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் நிலையான முன்னுரிமை என்று அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால், உலகளாவிய போர்களை நிறுத்துவதற்கான தனது சுய-பிரகடனப்படுத்தப்பட்ட பரப்புரையை டிரம்பின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன் விளைவாகவே மோடி சொல்லாத கருத்துகளை சொன்னதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.