ஜப்பானில் புதிய அரசியல் மாற்றமாக, அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி விரைவில் பதவியேற்க உள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்று, டகாய்ச்சி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே டகாய்ச்சி
ஜப்பானில், ஷிகெரு இஷிபா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, பிரதமர் ஷிகெரு கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, உட்கட்சி வாக்கெடுப்பின் மூலம், லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக, 64 வயதான அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே டகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். இததைத் தொடர்ந்து, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றார்.
அவர் கட்சித் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் ஜப்பான் பிரதமராக தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு, அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் இன்று நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 465 ஓட்டுகளில், 237 ஓட்டுகளை பெற்று, சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, மேலவையில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், ஜப்பானின் புதிய பிரதமராக அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார். மேலும், ஜப்பான் வரலாற்றிலேயே, முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுவார்.
வலிமையான மனப்பான்மை கொண்ட பெண்ணாக அறியப்படும் சனே டகாய்ச்சி, ஜப்பானின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு பொறுப்பான நாடாக ஜப்பானை மறுவடிவமைப்பேன் என உறுதியளித்துள்ளார். மேலும், பெண்களின் உடல்நலப் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருப்பதால், அந்த சவாலை டகாய்ச்சி எதிர்கொள்வார். அதோடு, ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை ஜப்பான் நிறுத்த வேண்டும் என்றும், ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். அது குறித்தும் ஒரு திடமான முடிவை டகாய்ச்சி எடுக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.