Trump Israel Gaza: காசாவில் ஏற்கனவே உணவு இன்றி குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வரும் சூழலில், தாக்குதலை தீவிரப்படுத்த ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
”காசாவை தாக்குங்கள்” - ட்ரம்ப்:
அமெரிக்க முன்னெடுத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் நிராகரித்ததை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அதனை சுத்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் படையினருக்கு அமைதியின் மீது எந்தவிருப்பமும் இல்லை என்றும் பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், “ஹமாஸ் உண்மையில் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விரும்பவில்லை. அநேகமாக அவர்கள் இறக்க வேண்டுமென விரும்புகிறார்கள். இது மிக மிக மோசமானது. ஹமாஸிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதில் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். இந்த இறுதிகட்டத்திற்கு பிறகு என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். அதன் காரணமாகவே அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறார்கள்” என ஸ்காட்லாந்திற்கு புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
”வேட்டையாட வேண்டும்” - ஹமாஸ்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ட்ரம்ப், “இஸ்ரேல் ராணுவம் காஸாவில் இறங்கி ஹமாஸ் படையினரை சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் வேட்டையாடப்பட வேண்டும”என தெரிவித்துள்ளார். இதனிடையே நேதன்யாகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “காஸாவில் உள்ள தங்களது பணயக்கைதிகளை மீட்பது மற்றும் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற இலக்குகளை அடைய இஸ்ரேல் இப்போது மாற்று வழிகளைப் பற்றி யோசித்து வருவதாக” தெரிவித்துள்ளார்.
பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள்:
மறுபுறம் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸா நகரம் சீர்ல்குலைந்ததோடு பசி, பட்டினியும் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. சர்வதேச உதவி நிறுவனங்கள் காஸாவின் 22 லட்சம் மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாக எச்சரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து போதிய உணவு இன்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதில் 83 பேர் குழந்தைகளாவர்.
தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்:
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் அவசியமான சிறப்பு சிகிச்சை உணவு விநியோகம் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. தய்மார்களுக்கும் போதிய உணவு இல்லாத நிலையில், கைக்குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க முடியாத கையறு நிலை ஏற்பட்டு இருப்பதை மனதை உருக்குகிறது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலிய கட்டுப்பாடுகள் இடையூறாக இருப்பதாக ஐ.நா. அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக இஸ்ரேல் வாதிடுகிறது.
ஓயாத மரண ஓலம்:
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டால் வெள்ளிக்கிழமை மட்டும் மேலும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் படையினர் எல்லை நகரங்களைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. இதனால் கிட்டத்தட்ட 60,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் என்றும், பெரும்பாலான பகுதி இடிபாடுகளாக மாறிவிட்டதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.