தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை காரணமாக இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே நேற்று நடந்த தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இன்று தாக்குதல் மேலும் தீவிரமடைந்து, தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
தீவிரமடைந்த மோதல் - 16 பேர் பலி
ஏற்கனவே நேற்று இருதரப்பு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்ட நிலையில், இன்று ஜெட் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் தரப்படையுடன் சண்டையிடும் அளவிற்கு மோதல் முற்றியுள்ளது. இரு தரப்பிலிருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.
இன்றைய பங்கர தாக்குதல்களில், தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் தங்களது தூதர்களை வெளியேற்றிவிட்டதால், ராஜதந்திர நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனினும், பல பெரிய சக்திகள் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இச்சூழ்நிலை குறித்து இன்று அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.
தாய்லாந்து குற்றச்சாட்டு
தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், எல்லை தாண்டிய மோதல்கள் போராக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளும் 2-வது நாளாக தாக்கதல்களை நடத்தி வருகின்றன. கம்போடியா பலமுனை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், தாய்லாந்து தனது பிரதேசத்தை பாதுகாத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அடங்கும் எனவும், நிலைமை தீவிரமடைந்து, போர் நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ள தாய்லாந்து தற்காலிக பிரதமர், இது கனரக ஆயுதங்களின் மோதலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பீரங்கி மற்றும் ரஷ்ய தயாரிப்பு பிஎம்-21 ராக்கெட் அமைப்புகளை கம்போடியா பயன்படுத்தியதாக தாய்லாந்து குற்றம்சாட்டியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், தாய்லாந்தை தாக்க, ராயல் கம்போடிய ராணுவம், ஆர்எம்-70 மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டத்தை பயன்படுத்துவது தெரியவருகிறது.
கம்போடியாவின் குண்டுவெடிப்பை, பயங்கரமான தாக்குதல்கள் என்று தாய்லாந்து ராணுவம் விவரித்துள்ளது.
கம்போடியாவை திருப்பித் தாக்கிய தாய்லாந்து
கம்போடியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்லாந்து ராணுவமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாய்லாந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கம்போடிய ராணுவத்தின் நிலைகளை குறி வைத்து ராயல் தாய் ராணுவம், எம்758 தன்னாட்சி டிரக்-மவுண்டட் கன்(ATMG) வைத்து, 155 மிமீ குண்டுகளை வீசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவரும் நிலையில், இது பெரிய போராக மாறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.