Trump Putin Alaska Meeting:  ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து இருந்தால், 2022ல் உக்ரைன் போரே ஏற்பட்டு இருக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் - புதின்: 2.5 மணி நேர சந்திப்பு

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ம்ற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை அலாஸ்காவில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 1 மணியளவில் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மோதலாக கருதப்படும் உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இந்த பேச்சுவார்த்தை, மிகவும் பயனுள்ள மற்றும் பரஸ்பர மரியாதைமிக்க ஒரு சந்திப்பாக முடிவடைந்துள்ளதாக இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”முடிவு ஏதும் எட்டப்படவில்லை”

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. நாங்கள் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினோம், மேலும் பல விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன. இன்னும் மிகச் சில மட்டுமே உள்ளன. நாங்கள் போர் முடிவை எட்டும் சூழலுக்கு செல்லவில்லை, ஆனால் அங்கு செல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு எங்களுக்கு உள்ளது ” என குறிப்பிட்டார். இதன் மூலம் போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதையடுத்து பேசிய புதின், “பேச்சுவார்த்தை முழுமையானது மற்றும் பயனுள்ளது. உக்ரைன் உடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் ரஷ்யா உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது. ஆனால் எங்களின் நியாயமான கவலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும்” வலியுறுத்தினார்.

ட்ரம்பை பாராட்டிய புதின்:

தொடர்ந்து பேசுகையில், “அதிபர் டிரம்பும் நானும் மிகச் சிறந்த, வணிகரீதியான மற்றும் நம்பகமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். இந்தப் பாதையில் செல்வதன் மூலம், உக்ரைனில் உள்ள மோதலின் முடிவை நாம் விரைவில் அடைய முடியும்.  சிறப்பாக அடைய முடியும் என்று நம்புவதற்கு எனக்கு எல்லா காரணங்களும் உள்ளன.தான் மட்டும் அதிபராக இருந்து இருந்தால் உக்ராஇன் - ரஷ்யா போர் ஏற்பட்டு இருக்காது என ட்ரம்ப் கூறினார். நான் அதை ஏற்கிறேன்” எனவும் புதின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப் உடனான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறலாம் என்றும் புதின் தெரிவித்தார்.

இந்தியா மீதான வரிச்சுமை குறையுமா?

இதனிடையே, புதின் உடனான பேச்சுவார்த்தை சரியாகா செல்லாவிட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். ஆனால், இருதலைவர்களின் செய்தியாளர் சந்திப்பானாது நேர்மறையாகவே முடிவுற்றுள்ளதாக தெரிகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக புதின் மேற்கொண்ட அமெரிக்க பயணம், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவிகிதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.