Continues below advertisement

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை வெளியேற்ற, ட்ரம்ப் நிர்வாகம் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி வசிக்கும் குடியேறிகள், இந்த வருட இறுதிக்குள் நாட்டை விட்டுத் தாமாகவே வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை(DHS) அறிவித்துள்ளது.

குடியேறிகள் வெளியேற அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன.?

Continues below advertisement

அமெரிக்காவில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், ஆவணமற்ற குடியேறிகள் தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேற ஒரு மெகா கிறிஸ்துமஸ் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. பெருமளவிலான நாடுகடத்தல்களை அதிகரிக்கவும், அமலாக்கச் செலவுகளைக் குறைக்கவும், சமீபத்திய முயற்சியாக, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(DHS), சட்டவிரோத வெளிநாட்டினர் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டாலர்கள் அல்லது தோராயமாக 2,70,738  ரூபாய் கட்டண பயணச் சலுகையை வழங்குகிறது.

ஏற்கனவே 1,000 டாலர்களாக இருந்த இந்த ஊக்கத்தொகை, தற்போது கிறிஸ்துமஸ் கால விசேட சலுகையாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 3,000 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. CBP Home'(முன்னர் CBP One) எனும் செயலி மூலம் இந்த சலுகையைப் பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும். இந்தச் சலுகை வரும் 2025 டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல், தாமாக வெளியேறுபவர்களுக்கு இலவச விமானப் பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக விதிக்கப்படும் சிவில் அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

இதனிடையே, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு கட்டாயமாக வெளியேற்றப்படுபவர்கள், மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய  ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2025 ஜனவரி முதல் இதுவரை, சுமார் 1.9 மில்லியன் குடியேறிகள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்து நாடு கடத்த, சுமார் 17,000 டொலர்கள் வரை செலவாகும் என்பதால், இந்தத் தன்னார்வ வெளியேற்றத் திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.