அமெரிக்காவில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணையுடன் தொடர்புடைய அரசாங்க கோப்புகளில், நேற்று புதிதாக வெளியிடப்பட்ட தொகுப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும், அமெரிக்க நீதித்துறை (DOJ) இந்தக் கூற்றை நிராகரித்து, அதை "பொய்யானது மற்றும் பரபரப்பானது" என்று கூறியுள்ளது.
நேற்று வெளியான புதிய கோப்பில் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு
எப்ஸ்டீன் வழக்கு தொடர்புடைய புதிய ஆவணங்களை நேற்று அந்நாட்டு நீதித்துறை(DOJ) வெளியிட்டது. இந்த வெளியீடு, இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி வெளியாகும் எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாகும். அந்த சட்டம், மறைந்த பெடோஃபைலின் குற்றவியல் வழக்கு தொடர்பான பதிவுகளை கூட்டாட்சி அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று கோருகிறது. கோப்புகளை வெளியிடுவதற்கு முன்னர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ட்ரம்ப் கடந்த மாதம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 30,000 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் இப்போது நீதித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
அதில் உள்ள ஒரு கோப்பில், அக்டோபர் 27, 2020 தேதியிட்ட FBI இன்டேக் அறிக்கை, முன்னாள் லிமோசின் ஓட்டுநரிடமிருந்து ஒரு விசாரணையை பதிவு செய்கிறது. அந்த அறிக்கையின்படி, 1995-ம் ஆண்டு ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்ததாக, தான் கேட்டதாகக் கூறும் ஒரு சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை ஓட்டுநர் விவரித்துள்ளார். அந்த நேரத்தில், அங்கிருந்த பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், ஓட்டுநரிடம் "அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று எப்ஸ்டீனுடன் இருந்த ட்ரம்ப்பை கூறியதாக ஆவணம் குற்றம் சாட்டுகிறது.
பின்னர், என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினரை அந்த பெண் தொடர்பு கொண்டதாகவும், தொடர்ந்து, ஜனவரி 2000-ல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்ததாகவும் ஓட்டுநரின் விசாரணைக் குறிப்பு கூறுகிறது. கோப்பில் உள்ள விவரங்கள் பெரிதும் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அமெரிக்க நீதித்துறை அளித்த விளக்கம்
இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையுடன், DOJ இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், சில ஆவணங்களில் "2020 தேர்தலுக்கு முன்பு FBI-யிடம் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக கூறப்பட்ட உண்மையற்ற மற்றும் பரபரப்பான கூற்றுக்கள்" இருப்பதாக கூறியுள்ளது.
‘இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த நம்பகமான அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்றும் அதிகாரசபை விவரித்தது. "தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. மேலும் அவற்றுக்கு சிறிதளவு நம்பகத்தன்மை இருந்திருந்தால், அவை நிச்சயமாக அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக ஏற்கனவே ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்" என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பதிவுகளை வெளியிடுவதற்கான சட்டப்பூர்வ தேவைக்கான அதன் உறுதிப்பாட்டை நீதித்துறை மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், கோப்புகளில் அத்தகைய கூற்றுக்கள் சேர்க்கப்படுவது அவற்றை உண்மையாக்காது என்றும் கூறியது.