பாகிஸ்தான் நாட்டில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.


கோர விபத்து


பாகிஸ்தானின் துறைமுகம் உள்ள நகரமான கராச்சியில் இருந்து நேற்று இரவு ஹைதராபாத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நூரியாபாத் என்கிற பகுதியை அடைந்த போது பேருந்தில் உள்ள ஏர் கண்டிஷனர் யூனிட்டில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. முதலில் புகை மட்டும் ஏற்பட்ட நிலையில், மெல்ல மெல்ல தீ சுற்றிலும் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது.



சிலர் மட்டும் தப்பித்தனர்


உறங்கிக்கொண்டிருக்கையில், தீப்பற்றியதை அறிந்து முதலில் விழித்துக்கொண்ட பயணிகள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து வெளியில் சென்று தப்பித்துவிட முயற்சித்துள்ளனர். அப்போது பேருந்தில் பயணித்த சில பயணிகள் மட்டும் உடனடியாக செயல்பட்டு தப்பி பிழைத்துவிட்ட நிலையில், பலர் உள்ளேயே மாட்டிக்கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்: கதறி கதறி அழுத ஜி.பி.முத்து... விடிய விடிய பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து!


மருத்துவமனையில் அனுமதி


இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் அடங்குவார்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் 35 பயணிகள் இருந்த நிலையில், சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்த பலர் விபத்து நடந்த இடத்துக்கு அருகே, ஜம்ஷாரோ என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பயங்கர மழையால் வெள்ளம் ஏற்பட்டு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களுக்கு பலர் குடியேறும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு வெவ்வேறு இடங்களில், குடியேறி தங்கியிருந்த மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லதான் இந்த பேருந்தில் பயணித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி கேட்பவர்களை மேலும் வேதனை அடைய செய்துள்ளது.






தொடர்ந்துவரும் விபத்துகள்


பாகிஸ்தானில் சமீப காலங்களாக சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானில் சாலை விபத்துகள் பெரும்பாலும், அதீத வேகமும், மோசமான சாலை கட்டுமானமும் காரணமாக தான் நிகழ்கிறது. அதோடு மக்கள் பலர் காலாவதியான வாகனங்களை பயன்படுத்துவதாலும், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டில் எண்ணெய் டேங்கர் வாகனங்களில் மோதி, அதனால் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி குறிப்பிடத்தக்கது.